PAGE LOAD TIME

56.முதுமை வரமா? சாபமா?

சிரிக்க வைக்கப் பதிவெழுதும் கண்மணியின் நெகிழ வைக்கும் பதிவு.
கொஞ்ச நாளாக மனதில் இருந்த குமுறல் இன்று வல்லியம்மாவின் பதிவு பார்த்த பிறகு என்னை இந்த பதிவெழுத தூண்டியது.
ஜி.போஸ்ட் கௌதமின் அம்மா கவிதைப் போட்டிக்கும் இதை சுருக்கமாக குறிப்பிட்டு எழுதி இருந்தேன்.
அம்மா என்பவள் எத்தனை அன்பானவள் அருமையானவள்.அப்பாவைப் பிரிந்து இருக்கும் பிள்ளைகள் கூட அம்மாவைப் பிரியத் துணியாது.
வயது ஏறும் என்ற கவலையின்றி தன் பிள்ளைகளுக்கு மணமாகி பேரப் பிள்ளைகளும் வந்த போதும் அவைகளும் ஆளாகி கொள்ளுப் பேரப்பிள்ளைகளையும் கொஞ்ச வேண்டும் என்ற ஒரே ஒரு பேராசையை மட்டுமே வரமாய் நினைத்து தமிருப்பவள் அதுவே சாபமாகவும் கூடும் என்பதை அறியாமலே.
அந்த அம்மாவை தெய்வமாய் நினைத்து உயிராய் மதித்த பிள்ளைகள் கூட வேலைப் பளு குடும்பச் சூழல் கருதி அவளின் முதுமையில் அருகிருந்து கவனிக்க முடியாத சோகம் இது.
அன்பான ஒரு அப்பா,அம்மா.மூன்று பிள்ளைகள் ஒரு பெண். அவர்களின் படிப்புக்காக வளமான எதிர்காலத்திற்காக தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளையும் புறம் தள்ளி ஆளாக்க இன்று அந்த பிள்ளைகள் பதவி,புகழ்,பணம் என்று வாழ்வின் உயரத்தில் இருக்கின்றனர்.
தந்தையின் மறைவுக்குப் பிறகு தாய் பிள்ளைகள் வீட்டில் நன்றாகவே இருந்தாள்.
ஆனால் முதுமை ,சர்க்கரை நோயின் தீவிரத்தால் உடல் நலம் குன்றி நலிந்து போனாள்.அப்போதும் பிள்ளைகள் அவளை சீராட்டினர்.குடும்பத்தில் நடக்கும் எந்த விஷேஷமும் அவளின் ஆசியோடே நடந்தது நடந்து கொண்டும் இருக்கிறது இன்னமும்.
ஆனால் நடமாட்டம் நின்று போன நிலையில் ஒரு அறைக்குள்ளேயே சுருங்கிப் போன அவளின் உலகத்தில் மகன்ளும் மகளும் வெறும் பார்வையாளர்களாகி விட்டனர்.
தூக்கி விட துடைத்து விட என்று வேலைக்கு ஆட்கள் இருந்தாலும் சிறைப் படுத்தப் பட்ட தனிமையில் வாடிக் கொண்டிருக்கும் அவலம்.
அவரவர்களுக்கு அவரவர் வேலை.அருகிருந்து பேசவோ கூடவே இருக்கவோ முடியாத வாழ்க்கை முறை.குடும்பச் சூழ்நிலை சிக்கல்.பணம் பொருட்டல்ல.லட்சமேயானாலும் செலவு செய்ய பிள்ளைகள் ரெடி.ஆனால் அவள் எதிபார்க்கும் அந்த நேசம், புரிதல், அவளின் உணர்வுகள் மதிக்கப் படுதல் சாத்தியமற்றுப் போயிற்று.
நேற்றைக்கு அம்மா நடமாடும் தெய்வம்.இன்றும் அம்மா தெய்வம்தான் ஆனால் முடங்கிப் போன தெய்வம்.மூலையில் கிடக்கும் தெய்வம்.
அன்பும் பாசமும் கூட உடம்பில் தெம்பிருக்கும்வரைதான் என்பதை புரிந்து கொண்ட புரிய வைத்த தெய்வம்.நடமாட்டமின்றி பிறர் தயவை நாடுவதாலேயே புறக்கணிக்கப்பட்ட தெய்வம்.
பிள்ளைகள் ஆளாகி பிள்ளைகளுக்கே பேரப் பிள்ளைகள் வந்த நிலையில் அவர்களின் கவனமும் கரிசனமும் குறைந்து கடமைக்காக்க பாதுகாக்கப் படும் தெய்வம்.
முதியோர் இல்லங்களில் சேர்க்கும் புறக்கணிப்பு இல்லையென்றாலும் முதுமை தந்த புறக்கணிப்பு அதனினும் கொடுமை.
எனக்குத் தெரிந்த வயதான ஒருவர் 'கடவுளே எனக்கு ஆறும் நல்லாயிருக்கணும் ' என்று வேண்டுவார்.என்ன என்று கேட்டபோதுதான் தெரிந்தது ரெண்டு கைகள்.கால்கள்,ரெண்டு கண்களூம் நல்லாயிருக்கும்வரை நல்லபடியா இருந்து யார்க்கும் தொந்தரவு இல்லாமல் போய்ச் சேரலாம் என்றார்.எத்தனை நிதர்சனமான உண்மை.
வல்லியம்மா சொன்னது போல் பணம், சேமிப்பு மட்டுமே முதுமைக்கு தீர்வல்ல.அன்பான உறவுகள் இருந்தாலும்கூட முதுமை முடக்கிப் போடும் போது தனிமைச் சிறையில் உணர்வுகள் ஒடுக்கப்படும் அவலம்.
கையாலாகாத இந்த அவலம் முதுமையின் சாபக்கேடே.

59 மறுமொழிகள்::

MyFriend said...

அக்கா, வந்தாச்சா?

உங்க கடையை எத்தனை தடவை வந்து எட்டி எட்டி பார்த்துட்டு போனேன்னு தெரியுமாக்கா? கடைக்கு ஏன் இத்தனை நாள் லீவு போட்டுட்டீங்க?

MyFriend said...

காமெடியக்கா இப்படி செண்டிமெண்ட்லக்காவாகிட்டரே!


அம்மாவோ அப்பாவோ.. அவங்கதான் நம் முதல் கடவுள். அவர்களுக்கு நாம் நம் கடமையை சரியாக செய்தால் முதுமை ஒரு வரமே! இல்லையென்றால் இப்படிப்பட்ட சாபமே கொடிய சாபம். :-(

delphine said...

O! No. Kanmani.. I think we should start accepting all these things in our life.. we should have our mind set! its high time we decide about where to live without really troubling our children. dont you think they ought to have their life.. let them enjoy!

கண்மணி/kanmani said...

செல்லமான சின்ன தங்கைக்கு [உன் பேர் என்னன்னு தனியா எங்கிட்ட மட்டும் சொல்லு மை பிரன்ட்]
வீட்டுல விஷேஷம் ஊருக்குப் போயிருந்தேன்.கண்மணி கதை மட்டுமே விட்டா சரிவருமா அதான் அப்பப்ப மனசுல தோனும் நெகிழ்வுகளும் நிஜங்களும்.

கண்மணி/kanmani said...

delphine mam what i said is not a fiction or assumption.its a happening still going on in my relative family.
no parent wish to be a burden to their loving kids but old age combined with illness made them miserable to lie on someone.
may be some are blessed to hv their end w/o disturbing others but few are like this forced to lead a dependable life.

delphine said...

Kanmani.. Yes. I do appreciate your concern. I have seen so many families.. so many people.. and now working for a cancer hospital, I see how the children ditch their parents..I really feel sorry for them.. in the present day set up when this world is fast moving, our youngsters do not have time to look after themselves and how can we expect them to take care of their parents.. i have almost gone through all your postings and I have been forwarding to my friends and relatives and theres a big anony gang too. Come on Kanmani.. dont be a sentimental .. can i say Fool??? (with your permission).. no hard feelings plz. Lets be positive.

கண்மணி/kanmani said...

மேம் நான் சொன்ன நபர் உங்க அப்போலோ ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்யே கேன்சர் ஆப்ரேட் செஞ்சிகிட்டவங்கதான். கண்மணியின் டிரெண்ட் காமெடிதான்.லைப்ப அதன் போக்கிலேயே விட்டுட்டு வாழ நினைப்பவள். இன்னைக்கு நாச்சியார் பதிவு ஒன்னுல முதுமைக்கு வேண்டிய சேமிப்பு வேணும் என்பதுபோல் படித்தபோது சேமிப்புக்கும் மிஞ்சிய அனுசரணையை முதியவர்கள் இழந்து கொண்டிருக்கும் அவலத்தை சுட்டிக் காட்டவே இந்தப் பதிவு.மற்றபடி நான் ஒரு கல கல பார்ட்டிதான்.
சரி இனிமே இந்த அழுகாச்சி பதிவு போடலை.as a friend you hv every rights to call me a fool.i'm really honoured by ur concern mam.

delphine said...

http://dharumi.blogspot.com/2006/12/192-for-eyes-of-senior-citizens-only.html

கண்மணி நம்ப தருமி என்ன சொல்கிறாங்கன்னு பாருங்க.

and please dont call me madam. I prefer to be called as Delphine.. i think its a nice name....OK?

துளசி கோபால் said...

முதுமைக்கு வெறும் அனுசரணை மட்டும் போதாது கண்மணி. நிதரிசனத்துக்கு வாங்க.

நம்ம டெல்பீன் சொன்னதுபோல காலம் ரொம்ப வேகமா மாறிக்கிட்டு வருது.
பிள்ளைகளுக்கு அவுங்களுக்குன்னு இருக்கும் கவலைகள் போதும். நாமும் அவுங்களுக்குப்
'பாரமா' இருக்கக்கூடாது.

கையில் காசும் இல்லாமப் பிள்ளைகளைக் கஷ்டப்படுத்தணுமா? அவரவருக்கு
அவருடைய வாழ்க்கை இருக்குல்லே?


முதியோர் இல்லம் ஒரு நல்ல தெரிவுதான் கண்மணி. நமக்கு அதை ஏத்துக்கற மனப்பக்குவம்
வேணும். நம்ம வயசொத்த நண்பர்களோடு பழகுவது ஒரு நல்ல சுகானுபவம்.

கண்மணி/kanmani said...

சாரி துளசிக்கா உங்க,டெல்பின் கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லை.பெற்றவர்களுக்கு செலவிட முடியாத பணமும்,ஒதுக்க முடியாத நேரமும் நாகரிக உலகின் கட்டாயமாக இருக்கலாம். உப்யோகப்படுத்திய பின் 'கன்டெம்டு'ஆக முதியோர் இல்லத்தில் போட அவர்கள் என்ன ஜடப் பொருளா?என்னைக் கேட்டால் முதியோர் இல்லம் என்பது யாருமற்ற முதியவர்களுக்கு மட்டும்தான் சரி.பிள்ளைகள் உள்ளவர்களுக்கும் அதுதான் தேர்வென்றால் வாழ்க்கைக்கே அர்த்தமில்லாது போகிறது.என் ஆதங்கம் இப்படி எவ்வளவு பேசினாலும் இதைத்தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதே.
என்னைப் பொறுத்தவரை முதியோர் இல்லத்தில் விடுவதும் ஒரு கருணைக் கொலையே. அது சிலருக்கு உடன்பாடாகவும்,சிலருக்கு இல்லாமலும் போகலாம்.அவரவர் மனநிலையைப் பொறுத்தது.

தருமி said...

கண்மணி, டெல்பின், துளசி (டீச்சர், நான் உங்க கட்சி),
உங்கள் மூவரின் 'கலந்துரையாடலை' இன்னும் கவனித்துவர ஆசை...

கண்மணி/kanmani said...

ஓ வாங்க தருமி சார் .டெல்பின் சொன்ன உங்க போஸ்ட் பார்த்தேன்.பழையதாக இருப்பதால் பின்னூட்டவில்லை.சார் டீச்சர்,நீங்க ஒரு கட்சின்னீங்க.நெஞ்சைத் தொட்டு சொல்லுங்க. இதுதான் வாழ்க்கைன்னா நாம் எந்த கமிட்மென்ட்டும் இல்லாமா தனித்தனி தீவுகளாக இருந்திடலாம். டெல்பின் என்னை சென்டிமென்டல் இடியட் ன்னாங்க. பாசமும் அரவணைப்பும் இடியாட்டிசம் னா ஏன் குடும்பம் ?எல்லோருமே தனியாக இருக்கலாமே?
பிள்ளைகள் தொல்லைப்பட வேண்டாம் என்ற பெருந்தன்மை உங்களுக்கு இருக்கலாம் ஆனால் உங்கள் பெற்றோரை முதியோர் இல்லத்தில் விட எப்படித் துணிவீர்கள்?
உங்களுக்கு கருணைக் கொலையில் உடன்பாடு என்றால் இது சாத்தியம்.எனக்கு உடன்பாடு இல்லை.
மாறிவரும் உலகத்தோடு உறவுகளும் உணர்வுகளும் மாறனும் என்பது விதியல்ல.
கற்காலமாயினும் அம்மாதான் தற்காலமாயினும் அம்மாதான்.
பெற்ற பிள்ளை இளம்வயதில் இப்படி போலியோ,அல்லது ஆக்ஸிடென்ட் என்று நடைபிணமானால் கருணை இல்லத்தில் விடத் துணிவாரோ எந்த பெற்றோரும்? ஆனால் வயது முதுமையென்றால் மட்டும் முதியோர் இல்லமா? நாம் அதற்கு ரெடியா என்பது என் கேள்வியல்ல.ஏன் நாம் இருக்கும் போது அவர்களுக்கு முதியோர் இல்லம் என்பதே.

தென்றல் said...

நான் கண்மணி கட்சி!

/.... ஆனால் வயது முதுமையென்றால் மட்டும் முதியோர் இல்லமா? நாம் அதற்கு ரெடியா என்பது என் கேள்வியல்ல.ஏன் நாம் இருக்கும் போது அவர்களுக்கு முதியோர் இல்லம் என்பதே.
/
நல்ல point-ங்க!

மங்கை said...

//மனசுல தோனும் நெகிழ்வுகளும் நிஜங்களும். ///

இது தான் கண்மணி நிஜம்... உங்க உணர்வுகளை முழுசா புரிஞ்சுக்கிட்டேன்.
பெரியவங்க நமக்கு கஷ்டம் கொடுக்கனும்னு நினைக்க மாட்டாங்க.
ஆனா நாம் என்ன நினைக்குறோம்ங்கறது தான் கேள்வி.. ஹ்ம்ம்..பெரியவங்கள பக்கத்துல வச்சு பார்த்துக்குறது ஒரு சுகம்... உணர்வு
முடியாம போறது வேற விஷயம்
ஆனா முடியும்ங்கிற பட்சத்தில கண்டிப்பா நாம பார்த்துக்கனும்.. கடமைன்னு சொல்ல எனக்கு சுத்தமா இஷ்டம் இல்லை.. உரிமை..என் வாழ்க்கையில இது ஒரு பகுதின்னு நினைக்கிறேன்...

அந்த கொடுமைய அனுபவிச்சுட்டு இருக்கேன் கண்மணி...கண்ணீர அடக்க முடியாமதான் எழுதீட்டு இருக்கேன்..மாமியார், மாமனார் இல்லைன்னா பெத்தவங்கன்னு ஒரே வீட்ல வாழறவங்க வாழ்க்கையில
ரொம்ப புண்ணியம் பண்ணவங்கன்னு நினைப்பேன்....

ஒரு வேலை இது ஆள் ஆளுக்கு மாறுபடுமோ என்னமோ.. பொதுமைப்படுத்த முடியாது..ம்ம்ம்ம் எல்லாரும் இத ஒத்துக்கனும்னு நான் எதிர்பார்க்கலை...நான் நினைக்குறத, என் ஆசையை சொன்னேன்.. அவ்வளவு தான்

சாரி ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டேன்..ஹ்ம்ம்ம்ம்

delphine said...

Old age homes serve as a safe haven when there is no one to support them. The present day scenario Is that there is no reality with the upcoming generation. It is sad though. But we have to have the acceptance that living in an old age home is a very safe, secured, and a place to share their grievances with others like them.
For example, when both the husband and wife are working, they leave the house like 9Am and come back home by 6Pm. And during this time the old ones have to stay all alone at home and be on their own.

நெஞ்சைத் தொட்டு சொல்லுங்க. இதுதான் வாழ்க்கைன்னா நாம் எந்த கமிட்மென்ட்டும் இல்லாமா தனித்தனி தீவுகளாக இருந்திடலாம்.
This is not life… but it is a way of life. What are we going to lose in our life if we go and stay in a senior citizens home when we pretty well know that we will be a burden on the children.
we will make life simpler for the children.
உப்யோகப்படுத்திய பின் 'கன்டெம்டு'ஆக முதியோர் இல்லத்தில் போட அவர்கள் என்ன ஜடப் பொருளா?என்னைக் கேட்டால் முதியோர் இல்லம் என்பது யாருமற்ற முதியவர்களுக்கு மட்டும்தான் சரி.பிள்ளைகள் உள்ளவர்களுக்கும் அதுதான் தேர்வென்றால் வாழ்க்கைக்கே அர்த்தமில்லாது போகிறது.
No Kanmani.. Be positive.. parents are the greatest treasures in our world. they cannot be thrown out..but they should be comfortable.. the whole issue comes we are living in a world that is moving at a fast pace..


Adding years to life as they say, is meaningless if we cannot add life to our years

மங்கை said...

முதல்ல இது எப்படி தொல்லை ஆகும்னு எனக்கு தெரியலை... இப்பவும் நமக்கு ஒன்னுன்னா பதற பெரியவங்க எப்படி நமக்கு பாரமா இருக்க முடியும்...ஹ்ம்ம்ம்....

கண்மணி/kanmani said...

மங்கை உங்க பதிலை முழுமையாப்
புரிஞ்சிக்க முடியலைன்னாலும் ஏதோ ஒரு வலியை உணர முடிகிறது.கையாலாகாத சூழ்நிலைகள் மன்னிக்கப்படலாம்.ஆனால் முற்போக்கான சிந்தனை,
வாழ்க்கைமுறை என்று ஒரு போலியான நடைமுறையைத்தான் நான் கண்டிக்கிறேன்.நீங்கள் சொல்வதுபோல் இதை ஒரு நாளும் பொதுமைப் படுத்த முடியாது.ஆளாளுக்கு மாறலாம்.ஆனால் 'அப்போதைக்கு இப்போதே' என்ற நாச்சியாரின் வாதமும்,துளசிக்கா,தருமி சார்,டெல்பின் வாதமும் சுத்தமாய் உடன்பாடு இல்லை.
அப்படியானால் உறவறியாமல் வாழும் மிருகங்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு.
என் வார்த்தைகளின் தீவிரம் யாரையும் காயப்படுத்துமாயின் தயவுகூர்ந்து மன்னிக்கவும்.
இதில் மிக முக்கிய கொடுமை வளர்த்த நாய்க்கு உடல் முடியாத போதும் நடக்க முடியாமல் கிடந்த போதும் மலம் அள்ளி சுத்தம் செய்து இன்பெக்ஷன் ஆகக்கூடும் என்ற பயமும் ஒதுக்கி வாயற்ற ஜீவனை போஷித்தவர்கள்தான் இன்று உயிர் கொடுத்த தாயைப் பார்க்கவும் முகம் சுளிக்கின்றனர்.இயலாமை என்ற சால்ஜாப்பில் உறவை கவனிக்க முடியாத நானும் ஒரு குற்றவாளி என்பதை வேதனையுடன் ஒப்புக் கொள்கிறேன்.

delphine said...

அழுகாச்சி...அப்படீன்னா என்ன கண்மணி.. உங்க blog ஐ மிகவும் ரசித்துப்படிக்கும் மக்களில் நான் ஒருத்தி.அது என்னவோ my friend
சொன்ன படி அடிக்கடி எட்டிப்பார்த்துவிட்டு செல்வேன். என்ன மாதிரி எத்தனையோ பேரேக் கவர்ந்துவிட்டீர்கள். i guess within a very short period. plz keep up this spirit. lets argue... it will bring us still closer.

கண்மணி/kanmani said...

டெல்பின் [மருத்துவரான] உங்ககிட்டயிருந்து இப்படியொரு ஆர்குயூமென்ட் நான் எதிபார்க்கலை.
ஒல்டு ஏஜ் ஹோம்ஸ் எப்படி இயங்கினா நமக்கென்ன?அனாதை,ஆதரவற்ற சிட்டிஜன்ஸுக்கு நல்லபடி சேவை செய்யட்டும்.பாராட்டுகிறேன்.ஆனால் என் தாயை ,அல்லது என் மாமியாரை நான் இருக்கும் போது அங்கு சேர்க்கும் கல்நெஞ்சம் எனக்கு எப்படி வரும்?. சேர்க்க வேண்டிய கட்டாயம் என்ன? மங்கை சொன்னதுபோல் கையாலாகாத்தானம் என்றாலும் பரவாயில்லை.நாகரிக முறை என்றோ என் பிள்ளைகளுக்கு நான் பாரமென்றோ நினைப்பதே வரட்டு சித்தாந்தம்.சின்னப் பிள்ளைகளை 'கிரஷ்ஷில்' சேர்ப்பது போலவா இது?அல்லது வளர்ந்த டீனேஜ் பிள்ளையொன்று பெட் ரிட்டன் ஆக இருந்தால் என்ன செய்வோம்?கோமாவில் வீழ்ந்தால்?
கடைசிவரை பேணுவது நம் வழக்கம்.மேலை நாடுகளில் வேண்டுமானால் சிறகு முளைத்ததும் தனியாக்கப் படலாம்.அப்படியும் நான் சொல்வது நம் ஆதரவை நாடும் முதுமையடைந்தவர்களை.நல்ல சாப்பாடு,போஷாக்கு,எண்டெர் டெயின் மென்ட் ,துளசிக்கா சொன்ன புதுப் புது நட்பு அனுபவம் கிடைக்கலாம்.ஆனால்....பிள்ளைகளிம் பாசம் அருகாமை அரவணைப்பு வேண்டாம் எனச் சொல்லக்கூடிய ஒரே ஒரு முதியவரைக் காட்டுங்கள் பார்ப்போம். ஒருவேளை நம்மை நாமே பாதுகொள்ளும் தெம்பிருக்கும்வரை இது சாத்தியப் படலாம். நாடி தளர்ந்த பிறகு?பணத்திற்கும் ,பாதுகாப்பிற்கும் அப்பாற் பட்டது குடும்பத்தாரின் அரவணைப்பு.

கண்மணி/kanmani said...

வாங்க தென்றல் கட்சி கட்டி பேச வேண்டிய சூழலில் முதியவர்கள்..!!!!
இன்று நீ..... நாளை நான் ....மாதிரி..ஹூம்

கண்மணி/kanmani said...

வாங்க தென்றல் கட்சி கட்டி பேச வேண்டிய சூழலில் முதியவர்கள்..!!!!
இன்று நீ..... நாளை நான் ....மாதிரி..ஹூம்

தருமி said...

முதலில் இரண்டு விஷயங்கள் சொல்லணும்.
1. மகளிர் கூட்டணி போட்டு பேசிக்கொண்டிருக்கிறீர்கள்; நான் மூக்கை நுழைக்கிறேனோ, என்னவோ தெரியவில்லை.
2. நீங்கள் ஒரு மகளாக இருந்து பேசுகிறீர்கள்; நான் ஒரு பெற்றவனாக இருந்து பேசுகிறேன்.

//முற்போக்கான சிந்தனை,
வாழ்க்கைமுறை என்று ஒரு போலியான நடைமுறையைத்தான் ..//
'முற்போக்கான ' என்பதைவிடவும், நடைமுறைக்கான practical சிந்தனை என்று கொள்ளலாமா?

//ஒருவேளை நம்மை நாமே பாதுகொள்ளும் தெம்பிருக்கும்வரை இது சாத்தியப் படலாம். நாடி தளர்ந்த பிறகு?//
நான் சொன்னதே அந்த நாடி தளர்ந்த பருவத்திற்குரியதுதான் ..

உங்கள் விவாதம் அழகாயிருக்கிறது... செண்டியாக இருக்கிறது. ஆனாலும், நானுமே ஒரு பெரிய 'சென்டியாக' இருந்தாலும் .. let us agree to disagree :)

மீதி விவாதங்களையும் இனி வெளியில் நின்றே பார்க்கிறேன்.

delphine said...

டெல்பின் [மருத்துவரான] உங்ககிட்டயிருந்து இப்படியொரு ஆர்குயூமென்ட் நான் எதிபார்க்கலை.////
kanmani.. i dont see life as a doctor. thats my profession. i see life as it is.. probably as a matured woman.I value your sentiments.
இதில் முதியவர்கள், சிறியவர்கள் என்ற பாகுபாட்டுக்கு இடமே இல்லை. இளைஞர்களாகிய நீங்கள் வயதானவர்களுக்க்காக இவ்வளவு ஆதங்கப்படுவது மிகவும் சந்தோஷமே....நாம் நம் பெற்றோர்களை, மாமனார், மாமியாரை ப் பேணிக்காப்போம்.
சின்னக்குழந்தைகளை கிரஷ்ஷில் சேர்ப்பது போல் உலகத்தில் ஒரு கொடுமை க் கிடையாது. கேட்டால் குழந்தை க் கற்றுக்கொள்ளவேண்டும் என்பீர்கள். 5 வயது வரை குழந்தைகள் தாயின் பாதுக்காப்பில் வீட்டில் தான் இருக்கவெண்டும். வீட்டில் தாய் கற்றுக்கொடுக்காததையா கிரஷ்ல் கற்றுக்கொடுப்பார்கள்?...சிருக்குழந்தைகளுகு எப்படி கிரஷ்ஷோ.. அது போல் பெரியவர்களுக்கு முதியோர் இல்லம்.
hats off to you Kanmani... you should be an amazing personality with so much of sentimental values in life.
keep going..

ஷைலஜா said...

இளமை நாடகத்துக்கு
இடையே விழுந்தது திரை
முதுமை.


இளமையா இருக்கறப்போ உடம்பில சக்தி இருக்கும் அதனால மனசுக்கும் எதையும் தாங்கும் வலிமை இருக்கும் இல்லேன்னா எதிர்த்துப்போராட உத்வேகம் வரும் முதுமையில இதெல்லாம் காணாமல் போயிடும். அதனால கூடியவரைக்கும் பெரியவங்ககிட்ட இதமாப்பேச கத்துக்கணும்..ஆனால் சில வீடுகளில் பெரியவங்களும் சின்னக்குழந்தையா மாறி படுத்தற கதையும் இருக்கு.

தென்றல் said...

/Old age homes serve as a safe haven when there is no one to support them. /
சரியான சொன்னிங்க, Delphine !
' ....... when there is no one to support them' !

/....... old age home is a very safe, secured, and a place to share their grievances with others like them./
அவர்களுக்கு யாரும் இல்லாதபட்சத்தில் ...சரி! ஆனா மகனோ, மகளோ இருக்கிறப்ப ..... ஏன்?

/For example, when both the husband and wife are working, they leave the house like 9Am and come back home by 6Pm. And during this time the old ones have to stay all alone at home and be on their own. /
உங்க உதாரணத்தையே எடுத்துக்கலாம்.... இரண்டு பேரும் வேலைக்கு போய்ட்டா, இவுங்க வீட்டில ஒத்தாசையா இருக்கலாம். பத்திரிகை படிக்கலாம். டி.வி. பார்க்கலாம். [இதலாம் முதியோர் இல்லத்தில தான் இருக்கேனு சொல்றீங்களா? ... வாழ்க்கை முழுமை, அமைதி இருந்தா தான் இதலாம் அவுங்களால (யாராலையும்] இரசித்து செய்ய முடியும். இல்லனா சிறை வாழ்க்கை போலதான்] பள்ளிக்கூடங்களிலிருந்து - பேரனோ/ பேத்தியோ சாயந்திரம் வந்தாங்கனா அவுங்களோட விளையாடலாம், கதை கேட்கலாம் இல்ல சொல்லலாம், தெரிஞ்சா பாடம் சொல்லிக் கொடுக்கலாம் ... இதலாம் அவுங்க இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தரும் தருணங்கள் .... மகனோ/மருமகளோ இல்ல மகளோ/மருமகனோ இரவு ஆறு, ஏழு மணிக்கு அப்புறம் 'இன்னிக்கு செய்தியை பார்த்தியாப்பா.... பார்த்தியாம்மா...' -னு பேசலாம்...

அவுங்களோட அனுபவங்கள் நமக்கு பாடங்கள்.

அதைவிட்டுட்டு ' ...have to stay all alone at home and be on their own' கிறதுல எனக்கு உடன்பாடு இல்ல...

/.... .. burden on the children. we will make life simpler for the children. /
நீங்க எந்த அர்த்ததில இப்படி சொல்றீங்கனு தெரியலை? குழந்தைகளுக்கு, 'எப்படி வாழ்க்கை எளிமையாக்குறது?' நாம ஒரு முன் மாதிரியா இருக்கிறதயா? கண்மணி சொன்னதுபோல.. ' இன்று நீ..... நாளை நான் ....மாதிரி' யா?

/... they cannot be thrown out..but they should be comfortable.. /
So, comfortable-னா நல்ல வசதியான முதியோர் இல்லம்-னு சொல்றீங்களா? அப்படிபார்த்தா, குழந்தைகளை நல்ல வசதியான விடுதியில சேர்த்துவிட்டு, அவுங்க வாழ்க்கைய 'எளிமை'யா ஆக்கிருந்துருக்கலாமே?

/the whole issue comes we are living in a world that is moving at a fast pace../
அதனால..... ? இந்த 'fast face' உலகம் நமக்கு வாழ்க்கை ஆயிடுச்சி. நமக்கு வயசாகிறப்ப நம்ம குழந்தைகளை நம்ப தேவையில்ல ..... இப்பொழுதுள்ள பெரியவர்களின் வாழ்க்கை அப்படியா.... தனக்காக இல்லாமல் தன் குழந்தைகளுக்காகவே .... .. வாழ்ந்தவர்கள் ஆயிற்றே! அவர்கள் வாழ்க்கையே தன் குழந்தையை சுற்றிதானே அமைகிறது? அவுங்களுக்கு இந்த 'fast face' உலகத்தில [குழந்தைகளின் 'அரவணைப்பில்'] வாழ கத்துக்க மாட்டாங்களா என்ன?

தென்றல் said...

/வாங்க தென்றல் கட்சி கட்டி பேச வேண்டிய சூழலில் முதியவர்கள்..!!!!
இன்று நீ..... நாளை நான் ....மாதிரி..ஹூம்/

என்ன பண்றதுங்க....கண்மணி ?! 21ம் நூற்றாண்டுல இருக்கோம் ... ;(

வல்லிசிம்ஹன் said...

கண்மணி,
இதுதான் வயதுக்கு உண்டான சிந்தனை.

நான் குறிப்பிட்டது, முதுமைக்குச் சேர்த்துவைப்பது பற்றி.
எங்கள் பெற்றோரும் அந்த மாதிரித் தான் இருந்துவிட்டுப் போயும் சேர்ந்துவிட்டார்கள்.

அவர்களுக்கு சொல்பமே என்றாலும் பென்ஷன் என்று ஒன்று வந்தது.
எங்களை மாதிரித் தனியார் இடத்தில் வேலை செய்து ரிட்டையர் ஆனவர்களோ, இல்லை தொழில் செய்து ஓய்வெடுப்பவர்களோ,
ஒரு sizable amount பத்திரப் படுத்திவைக்கவில்லையென்றால் பட வேண்டிய அவஸ்தை கொஞ்சம் இல்லை.
நான் நேரில் பார்த்ததினால் சொல்கிறேன்.
நல்ல புத்திர பாக்கியம்
இருக்கலாம்.
ஆனால் ஓடுகின்ற வாழ்க்கையில் யார் யாரைக் குற்றம் சொல்ல முடியும்.
முதியோர் இல்லத்திற்கு யாரையும் அனுப்பும்படி நான் சொல்லவில்லை.

இன்று நீ நாளை நான் என்கிற வாக்கியத்தில் இன்று நானாகத்தான் நான் இருக்கிறேன்.
எனக்கும் என் குழந்தைகள் எங்களைச் சரியாகக் கவனித்துக்கொள்ளுவார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
அதையும் மீறி சுதந்திரமாக இருக்கவேண்டும் என்று நான் நம்புவதில் என்ன தப்பு.
நோயில் வீழ்ந்த ஒரு (புகுந்த வீட்டு)பாட்டியையும் கவனித்துக் கடைசிவாய்த் தண்ணீரையும் விட்டவள் நான்,.
அந்தப் பாட்டியும் பதினாறு பெற்றவள்தான்.
எல்லாவிதத்திலும் உயர்ந்த மனுஷி.
அவளுக்கு வாய்த்ததும் சுலபமான சாவு இல்லை.

நோயும் மரணமும் நம் கையில் இல்லை.
அதைத்தான் வாங்கி வந்த வரம் என்று சொன்னேன்.

மங்கை said...

Dr.Delphine...

Sorry to interrupt..

நீங்க சொன்னதே தான் நானும் சொல்றேன்..we want to add 'life' to thier remaining years..as long as they live...

தருமி ஐயா...

நானும் மூக்க நுழைக்குறேன்..

பிராக்டிக்கலா இது சாத்தியமில்லைனு சொல்றீங்களா..அது தான் ஏன்னு கேக்குறோம்... பார்க்க இஷ்டம் இல்லாத குழந்தைகளிடம் இருப்பது கொடுமைதான்..அந்த நிலைமைல இருக்குற பெற்றோர்கள் காப்பகத்துல இருக்குறதே மேல்னு நினைக்கலாம்.. இல்லை மகனிடமோ, மகளிடமோ இருந்தா சுதந்திரமா இருக்க முடியாதுன்னு நினைக்குறவங்க, அந்த சுதந்திரம் தனியா இருந்தா கிடைக்குதுன்னு நினைச்சு இருக்கலாம்.. அது அவங்க விருப்பம்..நான் சொல்றது சுயநலத்துக்காக பெற்றோர கவனிக்காம இருக்குறது..மன்னிக்க முடியாத குற்றம் ஐயா...அது யாராயிருந்தாலும் சரி... இஷ்டம் இல்லாத பெற்றோர இழுத்துட்டு வந்து எங்களோட தான் இருக்கனும்னு சொல்லை... அப்படி ஏங்கற பெற்றோருக்கு நம்ம அரவனைப்பு தேவயில்லையானு கேக்குறேன்

ஒதுங்கி இருந்து பார்த்தா எப்படி... அப்புறம் மகளிர் அணி அது இதுன்னு நீங்களே சொல்றீங்க...:-))

Anonymous said...

அன்பு பாசம் என்பதை அடுத்தவரால்
ஒருவருக்கு ஊட்ட முடியாது.
அவை அதுவாக உள்ளத்தில் ஊற்றெடுக்க வேண்டும்.
ஒரே இடத்தில் வாழ்பவர்கள் ஒருவருக்கொருவர்
உதவியாக உண்மையானவர்களாக
வாழ்வதானால் ஒன்றாக இருப்பதில்
அர்த்தமிருக்கிறது.
அடுத்தவர்க்காக பாசாங்கு
செய்வதில் அர்த்தமே இல்லை.
''முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்'' என்பதை புரிந்து கொண்டால் தான் நன்மையுண்டு.

துளசி கோபால் said...

நானும் 'வெளியே' இருந்துதான் பார்க்கப்போறேன். ஆரோக்கியமான
விவாதம் நடக்கட்டும்.

என்னைப் பொறுத்தவரை எனக்கு 'சுதந்திரம்' வேணும்.

ஒருவேளை வயசு கூடினால் மனம் வேற மாதிரி நினைக்கலாம்:-)

துளசி கோபால் said...

இன்னொண்ணு சொல்லவா?

நோ மனத்தாங்கல் ப்ளீஸ்.

'எனக்கு இயலாமல் இப்படி இருக்கேன். ஆனா மத்தவங்க கட்டாயம் பெரியவங்களை வீட்டுலே வச்சுப்
பார்த்துக்கணும்'னு சொல்றது என்ன விவாதம்னு புரியலை.

மீண்டும் சொல்றேன், மனவருத்தம் தருமானால்
இந்த பின்னூட்டத்தைப் போட வேணாம் கண்மணி.

நான் புரிஞ்சுப்பேன்.

delphine said...

இந்த அழுகாச்சி பதிவு வேண்டாம் கண்மணி..'கிறுக்கு' பிடித்து போய்விடும். ......

தென்றல்-க்கு......
பள்ளிக்கூடங்களிலிருந்து - பேரனோ/ பேத்தியோ சாயந்திரம் வந்தாங்கனா அவுங்களோட விளையாடலாம், கதை கேட்கலாம் இல்ல சொல்லலாம், தெரிஞ்சா பாடம் சொல்லிக் கொடுக்கலாம் ...//////

என்ன தென்றல் நாட்டு நடப்பு தெரியாமல் இருக்கிரீங்க... இந்த காலத்து க் குழந்தைகளுக்கு tuition, பாட்டு class, dance class, அது , இது என்று மளிகைகடை லிஸ்ட் மாதிரி ஒரு பெரிய லிஸ்ட் வைத்துக்கொண்டிருக்கிறோம்.... அவர்களுக்கு எங்கே பெரியவர்களிடம் பேச நேரம்?
என்னுடைய argument...why bother the children to take care of us in our old age....
i am all mind set...as long as i can live independently, i will live like this...then may be i would prefer to go and stay in a senior citizen home..not that my children will not take care of me..i think its going to be the way of life in future..
i appreciate the younger generations concern over the older people..and thanks Kanmani for this wonderful post....

கண்மணி/kanmani said...

வல்லியம்மா,துளசிக்கா ரெண்டு பேருக்கும்மான பதில்:
முதல்ல வல்லி உங்க பதிவுல எந்த குறையும் நான் கண்டு பிடிக்கல.அந்த பதிவு எனக்குள் ஏற்கனவே இருந்த குற்ற உணர்வைக் கிளறி விடவேதான் இந்தப் பதிவு.
வேலைக்குப் போகும் ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு என் கடமையை தட்டிக் கழிக்கும்[தப்பிக்கப் பார்க்கும்?]கில்லிட்டினஸ் கொஞ்ச நாளாக மனதை வாட்டிய நேரம் உங்க பதிவு பூனைக் குட்டியை வெளியே இழுத்து விட்டது அவ்வளவே.
துளசிக்கா விவாதம் பொதுவானதே.எந்த கருத்தும் வரவேற்கப் படும்.வருத்தமில்லை.என்னால் இப்படி செய்ய முடியவில்லையே நாளை எனக்கே இந்த நிலை வரும்போது எப்படி என்ற பயமே இதற்கு காரணம்.என்னைப் போல் பலர் இருக்கலாம்.ஏதோ காரணம் சொல்லி தப்பித்துக் கொண்டு.அவர்களுடன் என் ஆதங்கம் பகிரும் முயற்சியே தவிர யாரையும் குறை கூறும் தகுதி எனக்கு இல்லை நானே குற்றவாளியாக இருக்கும் போது.
இன்று அவர்களுக்கு நாம் தரமுடியாததை நாளை நமக்கு எப்படி எதிர் பார்ப்பது? இதற்கு சகிப்பு ஒன்றுதான் தீர்வா?என்பதே என் வாதம் .யாரையும் புண்படுத்தவோ குற்றம் சொல்லவோயில்லை.

கண்மணி/kanmani said...

தருமி சார் அன்பு,பாசம் குடும்ப உறவுகள் னு வரும்போது இருபாலரும் சேர்ந்ததுதானே?இதில் ஆண்,பெண் பேதமென்ன? மகளிர் கூட்டணியில்லை.யாரும் வரலாம்.விவாதிக்கலாம்.கருத்துக்கள் மட்டுமே மோதுகின்றன.நாமல்லவே..

கண்மணி/kanmani said...

நன்றி அனானி.நாம் என்ன விதைக்கிறோமே அதுவே முளைக்கும்.இது புரிந்து கொள்ளுத தான் புரிய வைத்தல் இல்லை.

கண்மணி/kanmani said...

டெல்பின்,இது எதிர்பாராது வந்த 'அழுகாச்சி' பதிவு.கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு.கலகலப்புக்கு பின்னாலும் இது போன்ற கேள்விகள் உண்டு.
இருந்தாலும் கண்மணி என்னைக்கும் காமெடி கண்மணி தான்.
விரைவில் அம்புஜம் மாமியோடு வருகிறேன்.

அபி அப்பா said...

கண்மணி தங்கச்சி!
யார் சொன்னது முதுமை சாபம்ன்னு வரம்தான். நாம நாம நடந்துகறதுல தான் அது வரமா சாபமான்னு ஆண்டவன் முடிவு செய்வான்.

Ayyanar Viswanath said...

நல்ல பதிவு கண்மணி ..ஆரோக்யமான விவாத களமாகவும் அமைந்துவிட்டது சிறப்பு :)

Unknown said...

5 வயது வரைக்கும் காப்பகத்தில் குழந்தையைவிடுதல்.

50 வயதுக்கு மேல் பெற்றோரை காப்பகத்தில்விடுதல்.

எல்லாம் சரி வாழ்தல் என்றால் என்ன ? யருக்காவது தெரியுமா இங்கே?

இரண்டு செல்வங்களையும் அடுத்தவனிடம் வளர்க்கக் கொடுத்துவிட்டு $ வாழ்க்கை வாழும்மனிதர்களுக்கு மனிதம் புரியாது.

நுகர்வு மயமாகிப் போன வாழ்க்கையில் வாங்கிக் குவிப்பதே (சம்பளம் உட்பட) வாழ்க்கையின் குறிக்கோளாகப் போய்விட்டது.

சாப்பாட்டை மட்டும் நான் என் கையில் சாப்பிடுவேன் ஆனால் ஆசனவாயைத் துடைக்க வேலையாள் வைத்துக் கொள்வேன் என்று இருக்கமுடியுமா?

வாழ்வது என்பது அனைத்திலும் பங்கேற்பதுதான்.இப்போதுள்ள சமூகத்தில் 20 முதல் 50 வரை உள்ளவர்களே வாழத் தகுதியானவர்களாச் சித்தரிக்கப் படுகிறார்கள். :-(((

குழந்தையுடனும் ஒரு வயதான பெரியவரிடமும் மனம் விட்டுப் பேசிப்பாருங்கள் வாழ்க்கை என்பது ஓரளவாவது புரியும்.

நாடி நரம்பு தளர்ந்து போன காலத்தில்....வயது என்ன ஆனாலும் அவர்கள் இரத்தமும் சதையும் உணர்வும் உள்ள ஒரு மனிதர்களே.அன்பு பின்னோக்கியும் போக வேண்டும்.

பெரியவர்களை வீட்டில் வைத்து பார்க்க நினைப்பவர்களுக்கு மட்டும்:
-------------------------

அவர்களுக்கு ஓய்வு வழ்க்கை கொடுக்க வேண்டுமே தவிர குழந்தைகளை வளர்க்கும் முழு பொறுப்பையும் தள்ளிவிடக்கூடாது.அவர்களை அவர்களாக இருக்க விட வேண்டும்.

***
30-40 ல் உள்ளவர்கள் இப்போதே தங்களின் 50 தாண்டிய வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு அந்தப்பாதையில் செல்ல ஆயத்தமாக வேண்டும்.

***

வாழ்க்கை வாழ உழைப்பும் அதன் மூலம் வரும் பணமும் முக்கியம். ஆனால் அந்தப் பணத்தை வைத்து அன்பை வாங்குகிறாயா அல்லது அன்பானவர்களை விற்கிறாயா என்பதுதான் கேள்வி.

அலாஸ்கா சுத்திப் பார்ப்பதும் iPOD வாங்குவதும் மட்டுமே வாழ்க்கை அல்ல.பிச்சைக்காரர்களுடன் ஒருநாள் பொழுதை செலவிட்டுப்பாருங்கள். உலகம் புதிய பரிணாமத்தில் தெரியும்.


உனது வீட்டில் இருப்பதைவிட காப்பகத்தில் நான் நன்றாக இருக்கிறேன் என்று பெற்றோர்கள் சொன்னால் Where you are living is not a HOME...it is just a place அது உங்களுக்கு கேவலமாகப் படவில்லை?

குழந்தையின் எதிர்காலத்திற்காக பணம் சேர்க்க நான் வேலை பார்க்கிறேன், அதனால் எனது குழந்தையை வளர்க்க ஆள் வைத்துள்ளேன் ..என்று சொன்னால்...
you know how to manage your career but you do not know how to manage your life. :-(((

காப்பகத்தில் கிடைக்காத அன்பையும் சுதந்திரத்தையும் உங்களுக்கு வீட்டுச் சூழலிலும் எங்களால் ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.அதே சமயத்தில் எங்களது வாழ்வையும் நன்றாக பார்த்துக் கொள்ளமுடியும். என்ற நிலையில் பெரியவர்கள் நிச்சயம் நம்முடன் இருக்க பிரியப்படுவார்கள்.அதையும் தாண்டி பெரியவர்கள் தனியாகவே இருக்க நினைத்தால் அது அவர்களின் சுதந்திரம்.

டிஸ்கி:
வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று அவரவர்தான் தீர்மானிக்க வேண்டும்.அதனால் நான் சொன்னது எனது பார்வை மட்டுமே.

துளசி கோபால் said...

கண்மணி,

சரி, போதும் துக்கப்பட்டது. நல்லதே நடக்கட்டும். கவலை வேணாம். புரிஞ்சுக்கிட்டதுக்கு
நன்றி.

என்னோட ஒரு தோழியின் மாமியார் இப்படிக் கேன்ஸர் வந்து மூணுமாசம்
(மூணே மாசம்தான்)கஷ்டப்பட்டாங்க. அப்ப அந்தத் தோழி வேலைக்குப் போய்க்கிட்டு
இருக்காங்க. என் குழந்தையும், அவுங்க பசங்களும் ஒரே ஸ்கூல்தான். நான் தினமும்
பகலில் கோபால் வந்து சாப்புட்டுப்போனபிறகு அவுங்க வீட்டுக்குப்போய் அந்த
மாமியாருக்குக் கம்பெனி கொடுப்பேன். மூணு ஆனதும் பசங்களைப் பள்ளீக்கூடத்தில்
இருந்து என் குழந்தைகூடவே அழைச்சு வந்து நம்ம வீட்டுலே வச்சுக்கிருவேன்.

மாலை பசங்களோட அப்பா அஞ்சு அஞ்சரைக்கு வந்து பசங்களைக் கூட்டிட்டுப்போவார்.
அந்தம்மா உயிர் பிரியும் நேரத்தில் கடைசி நிமிஷம் நான் போய்ப் பார்த்து (அது ஒரு முன்னிரவு)ப்
பேசிட்டுப் பசங்களை இங்கே நம்ம வீட்டுக்குக் கொண்டு வந்துட்டேன். எல்லாம் ஆனதும் பசங்களை
இங்கே கோபால்கிட்டே விட்டுட்டு நான் மட்டும் போய் அவுங்களுக்கு தோழியுடன் சேர்ந்து உடையெல்லாம்
மாத்தி அலங்கரிச்சுட்டோம். அண்டர் டேக்கர் வருமுன் கோபால் மூணூ குழந்தைகளையும் கூட்டி வந்தார்.
எல்லாரும் பாட்டியைப் பார்த்து 'பை' சொன்னபிறகு அண்டர் டேக்கர் கொண்டு
போனார். அவுங்களுக்கு இந்திய முறையில் புடவை எல்லாம் கட்டத் தெரியாதில்லையா. அதுக்குதான்
நாங்களே எல்லாம் செஞ்சுட்டோம்.

மறுநாள் எரியூட்டியாச்சு. எல்லாரும் போய் நல்லபடி நடத்திக்கொடுத்தோம்.
ஆனா, அவுங்க மறைவுக்குப் பிறகு எனக்குத்தான் பகல் ஒண்ணரை ஆச்சுன்னா
மனசே பிழியும். அதுலே இருந்து மீளவே எனக்கு ரொம்ப நாளாச்சுப்பா.

அன்பு ஆதரவுன்றது யார் வேணாத் தரலாம். இன்னிக்கு(ம்) அதை நினைக்கும்போது
எனக்கு மகிழ்ச்சியாத்தான் இருக்கு. இது நடந்து இப்ப 14 வருசமாச்சு.

நமக்கு எங்கே இருந்து கிடைக்கணுமுன்னு விதி இருக்கோ அப்படி நடக்கும்.

என்றும் அன்புடன்,
துளசி.

தருமி said...

அப்பாடா, பலூன் மாமா வந்துட்டார் (ஆண்)துணைக்கு :) சும்மாதான்.

Are we ALL basically nice people? (என்னையும் சேர்த்து?)

வயசானவங்க (?) நாங்க சிலர் -நான், துளசி, டெல்பின் (மக்களே, கோவிச்சுக்காதீங்க!) வல்லிசிம்ஹன் வயசு பத்தி தெரியலை..கட்சி கட்டுறதைப் பார்த்தா அவங்களும் எங்க குரூப்தானோ?!)
வயசானவங்க நாங்க (அல்லது நான்) I love my children so much that i dont want to be a 'burden' (சொன்னாலும் சொல்லாட்டாலும் இதுதான் உண்மை) to them - even if they are ready என்பது எங்கள் (என்) வாதமாக இருக்கிறது.

"சின்னப் பிள்ளைகள்" நீங்கள் -- இல்லை .. இல்லை ... பெற்றோரின் வயதான காலத்தில் அவர்களைப் பேணுவது எங்கள் கடமையும், விருப்பமுமாகும் என்கிறீர்கள்.
இதில் நல்ல விஷயம் - இரு கூறாறின் கூற்றுமே அன்பை அடிப்படையாக வைத்தவை - பிள்ளைகளின் மேல் உள்ள அன்பு எங்களை இப்படிச் சொல்ல வைக்கிறது; பெற்றொரின் மேல் வைத்த அன்பு உங்களை இப்படிச் சொல்ல வைக்கிறது !!

அதோடு, பிள்ளைப் பிராயத்தில் குழந்தைகளை வளர்ப்பதையும், வயதான காலத்தில் பெற்றோரைப் பேணுவதும் ஒன்றல்ல என்று என் பதிவில் சொல்லியிருந்தேன். மீண்டும் அதையே வலியுறுத்த விழைகிறேன். முந்தியதில் இருப்பது சந்தோஷம்; பின்னதில் கடமை மட்டுமே.
திரும்பவும் சொல்கிறேன் - என் குழந்தை என் மடியில், நெஞ்சில் அன்று "ஆய்" இருந்தது இன்றும் கொஞ்சமும் அருவருப்பில்லாத, மகிழ்வான ஒரு பழம் நினைவு எனக்கு; நாளை நான் ஏதும் முடியாதவனாக முடங்கிப் போகும்போது அப்படி ஒரு விஷயம் மகிழ்வானதாக யாருக்கும் - என் அன்பு மகள்களுக்கும் - இருக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை. அப்படியாயின் நான் மிகவும் நேசிக்கும் என் பிள்ளைகள் - can i expect them to undergo those ordeals.

let them remember me as their dear அப்பா ALWAYS, rather than the 'one' who suffered and made them 'suffer' at the end .... ?

Unknown said...

//இதில் நல்ல விஷயம் - இரு கூறாறின் கூற்றுமே அன்பை அடிப்படையாக வைத்தவை - பிள்ளைகளின் மேல் உள்ள அன்பு எங்களை இப்படிச் சொல்ல வைக்கிறது; பெற்றொரின் மேல் வைத்த அன்பு உங்களை இப்படிச் சொல்ல வைக்கிறது !!//

உண்மை.

//நாளை நான் ஏதும் முடியாதவனாக முடங்கிப் போகும்போது அப்படி ஒரு விஷயம் மகிழ்வானதாக யாருக்கும் - என் அன்பு மகள்களுக்கும் - இருக்க முடியாது //

1.என்னதான் பல்டி அடித்தாலும் நம்மால் (என்னையும் சேர்த்துத்தான் வாத்தியாரே :-) ) ஒரு எல்லைக்கு மேல் சிந்திக்க முடியாது.நம்மிடம் ஒருவன் கடலைப் பற்றிப்பேசினால் அது கிணத்தைவிட பெருசா இருக்குமா என்றுதான் கேட்க முடியுமே தவிர குளத்தைவிட பெரிசாக இருக்குமா என்று கேட்க முடியாது. ஏன் என்றால் நாம் அறிந்தது கிணறு வரையில் மட்டுமே.

2.இன்றும் "ஆய்" போகும் அம்மா/அப்பாக்களை பார்த்துக் கொள்ளும் பிள்ளைகள் இருக்கிறார்கள்.

3.அந்த விசயம் மகிழ்வானதாக "யாருக்கும்" இருக்க முடியாது என்று சொல்லலாம்.ஆனால் பிள்ளைகள் செய்யத் தயங்கும் அதே வேலையை வேறு யாரோ காசுக்காகச் செய்கிறார்கள் காப்பகங்களில்.எல்லாம் மனமும் பணமும் சம்பட்ந்தப்பட்டது.

4.ஒரே விசயத்தைச் தொழிலாகச் செய்யும்போதும் கடமையாகச் செய்யும் போதும் வித்தியாசம் வரும்.ஒரு கோடிசுவரக் அமெரிக்க கிழவனுக்கு ஆய் கழுவ வேண்டும் சம்பளம் $90,000 வருசத்திற்கு, என்று சொல்லுங்கள். தனது தகப்பனை காப்பகத்தில் Rs 5000/ (மாதத்திற்கு ) க்கு அனுப்பிவிட்டு தயாராகிவிடுவார்கள் பெரும்பாலோனோர்.

//அதோடு, பிள்ளைப் பிராயத்தில் குழந்தைகளை வளர்ப்பதையும், வயதான காலத்தில் பெற்றோரைப் பேணுவதும் ஒன்றல்ல என்று என் பதிவில் சொல்லியிருந்தேன். //

இரண்டும் வேறுதான்.
* குழந்தை நம் சொல்படி கேட்கும் அல்லது நமது கண்ட்ரோலில் இருக்கும் குறைந்தபட்சம் 10 வயது வரையிலாவது.
* அவர்களை நாம் நமக்கு ஏற்ப வளைக்க முடியும்.
* நம்மிடம் அதிக பட்ச கண்ரோல் பவர் இருக்கும்.

வயதான பெற்றோர் அப்படி இல்லை.
* அவர்கள் ஒரு நிரம்பிய கோப்பை.
* நாம் அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் புதிதாக எதையாவது அந்த நிரம்பிய கோப்பையில் ஊற்ற முனையும்போதுதான் பிரச்சனை வருகிறது.
* இங்கு நமது கண்ட்ரோல் செல்லுபடியாகவில்லை.பிரச்சனையே அதுதான்.

நாயையும்,பூனையையும் ஏன் வளர்ப்புப்பிராணியாக செல்லம் கொடுத்து வளர்க்கிறார்கள்? அது கேள்வி கேட்காது.கண்ட்ரோல் நம்மிடம் உள்ளது.

//...அப்படியாயின் நான் மிகவும் நேசிக்கும் என் பிள்ளைகள் - can i expect them to undergo those ordeals.//
நீங்கள் சொல்வது... உங்களாலேயே உங்களை கவனிக்க முடியாமல் போகும் போது (உதாரணம்: "ஆய்" போதல்)நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை.

சரியா?

சரி அப்படியானால் மாற்று என்ன?

தன்னை தன்னால் கவனிக்கமுடியாமல் போகும் அனைத்து வயதான பெரியவர்களுக்கும் மாற்று வழி என்ன?

உங்கள் விளக்கம்படி இரண்டு வழிகள்தான் உள்ளது.

1.சாவு
2.காப்பகம்

சாவு:
நாம் கேட்டவுடன் வராது. எந்த மதக் கடவுளுக்கும் அந்த பவர் இல்லை.
தற்கொலை வேண்டுமானால் செய்து கொள்ளலாம்.

காப்பகம்:

நீங்கள் மிகவும் நேசிக்கும் பிள்ளைகள் செய்யக்கூடாத (அல்லது நீங்கள் செய்ய வேண்டாம் என்று என்னும் ஒரு செயல்) ஒன்றை காசுக்காக காப்பகங்களில் இருக்கும் மனிதர்கள் செய்யலாம். அதுதானே?

உங்களுக்கு "ஆய்" சுத்தம் செய்யப்போகும் காப்பக ஊழியரும் யாரோ ஒரு தகப்பனுக்கு நேசமான மகள்/மகன் தான்.

கடமையாக உங்கள் குழந்தைகள் செய்தால் மகிழ்வாக இல்லாத அதே செயல் காசு வாங்கிக் கொண்டு காப்பக ஊழியர் செய்வதால் மகிழ்வான ஒன்றாக மாறிவிடுமா?

என்ன செய்யப் போகிறீர்கள்?

கண்மணி/kanmani said...

நன்றாகச் சொன்னீர்கள் கல்வெட்டு [பலூன்மாமா] சாவு ஒரு தீர்வான கதை தெரியுமா?
பிரபல ஹிருதய அறுவைசிகிச்சை டாக்டர் 90 வயது செரியன் மேல் மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.காரணம் எவ்வளவு புகழ் இருந்தும் முதுமையின் பலவீனம் ஆதரவற்ற நிலை.தன்னிரக்கத்தில் மேற்கொண்ட முடிவு.
காப்பகம்:அங்கு வேலை செய்பவரும் ஒரு தாய்க்கு பிள்ளைதானே
அருமையான வாதம்.நன்றி

தென்றல் said...

/தென்றல்-க்கு......
என்ன தென்றல் நாட்டு நடப்பு தெரியாமல் இருக்கிரீங்க... இந்த காலத்து க் குழந்தைகளுக்கு tuition, பாட்டு class, dance class, அது , இது என்று மளிகைகடை லிஸ்ட் மாதிரி ஒரு பெரிய லிஸ்ட் வைத்துக்கொண்டிருக்கிறோம்.... அவர்களுக்கு எங்கே பெரியவர்களிடம் பேச நேரம்? /

கருத்துக்கு நன்றி, Delphine!

குழந்தைக பாட்டு class, dance class... லாம் கத்துகிட்டு அவுங்க திறமைய பார்த்து 'முதலில்' சந்தோஷப் படுறவங்க அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி ......... அவுங்ககிட்ட 'பேசகூட நேரம்' இல்லாமா ......குழந்தைகளுக்கு வாழ்க்கையில 'எது முக்கியம்' -னு சொல்லிகுடுகிறது நாமதான..?

தருமி, பேரை வைத்து தவறான நினைத்துவிட்டீர்கள்..! பரவாயில்லை..

/அதோடு, பிள்ளைப் பிராயத்தில் குழந்தைகளை வளர்ப்பதையும், வயதான காலத்தில் பெற்றோரைப் பேணுவதும் ஒன்றல்ல என்று என் பதிவில் சொல்லியிருந்தேன். மீண்டும் அதையே வலியுறுத்த விழைகிறேன். முந்தியதில் இருப்பது சந்தோஷம்; பின்னதில் கடமை மட்டுமே.
திரும்பவும் சொல்கிறேன்/

முந்தியதில் இருப்பது சந்தோஷம் மட்டும்தான...? அதிலும் கஷ்டங்களும், கடமையும் இருப்பது உங்களுக்கு நான் சொல்லிதான் தெரிய வேண்டுமா என்ன?

பின்னதில் கடமை மட்டும்தான்..? அதிலும் சந்தோஷங்கள் இல்லையா?

அருமை-ங்க, கல்வெட்டு! ரொம்ப அழகா... விளக்கமா சொல்லிட்டீங்க!

தென்றல் said...

பாமரனின் "தெருவோரக் குறிப்புகள்" என்ற பதிவிலிருந்து............
"கடந்த வாரம் சென்னை ஔகிலுள்ள ஒரு முதியோர் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். அறுபதைக் கடந்தவர்கள் அடைக்கலமாகியிருந்தனர் அதில். பிள்ளைகளால் நிராகரிக்கப்பட்டு சிலர். கணவனால் கைவிடப்பட்டு சிலர். விரும்பி ஏற்றுக் கொண்டு வந்தவர் சிலர்.
இளையராஜா ஒருமுறை இங்கு வந்து போனால் ‘ அம்மா என்றழைக்கின்ற உயிரில்லையே’ என்று தனது பாட்டை மாற்றிப் பாட வேண்டியிருக்கும். அங்கு உள்ளோரது துயரை மனதில் சுமந்தபடி இருள் கவியத் துவங்கிய வேளையில் வெளியேறினேன். இயந்திரமயமாகிக் கொண்டிருக்கிற உலகில் இனி இது அதிகரிக்கவும் கூடும்.
‘குடும்பம்தான் எல்லாம். குடும்பம்தான் பாதுகாப்பு’ என்று நம்பியவர்களின் நிலையை எண்ணும்போது மனது வலித்தது.
குடும்ப உறவு உண்மையில் எப்படி உள்ளது என்பதைக் கிண்டலடித்து ஓஷோ ஒருமுறை சொன்ன கதை நினைவுக்கு வந்தது."
மேலும் வாசிக்க .. http://tinyurl.com/22pa32

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்...கண்மணி அசத்திட்டீங்க..இப்படி அப்பப்ப உங்க மனசுல நினைக்கிறதப் பதிவாக்கி லேசாக்கிக்கோங்க ...

வாதம் ரொம்ப நல்லா இருக்குது.
கல்வெட்டு மங்கை தென்றல் இவங்க பக்கம் நான்...சுதந்திரம் அது ஒன்றுக்காக மட்டும் அவர்கள் காப்பகம் போகிறார்கள் என்றால் அதை வீட்டிலேயே அவர்களுக்கு கொடுக்கலாம். இந்த காலத்தில் கணவன் மனைவிக்குள்ளேயே ஒரு சுதந்திரம் நிலவத்தொடங்கி இருக்கும் போது இது வும் சாத்தியமே..

குழந்தைகளுக்கு இன்றைக்கு தாத்தா பாட்டியின் அரவணைப்பு கிடைத்தால் அவர்கள் இன்னமும் நன்றாக வளர்வார்கள் என்றால் அவர்களை புறக்கணித்து எந்த பாட்டி தாத்தாவாவது காப்பகத்துக்கு போவார்களா.. எத்தனையோ பேர் பேரக்குழந்தைகளுக்காக கஷ்டங்களை சகித்துக்கொண்டு இருக்கிறார்களே..

எங்களுக்காக தங்கள் வாழ்க்கையின் பாதி நாட்களைக் கழித்தவர்களுக்காக நாங்களும் அன்பினால் பதில் செய்யவேண்டும் அது வெறும் கடமை அல்ல தன்னிச்சையான ஒரு நிகழ்வாக இருக்க வேண்டும்.

என் கணவருடைய பாட்டியை நான் என் வீட்டில் அழைத்துவந்து வைத்திருந்தேன் சில காலத்துக்கு அப்போது பலர் அதை தவறென்றும் அவஸ்தை படப் போகிறாய் என்றும் கூறினார்கள்..உண்மை சில சமயங்களில் பிரச்சனையும் ஒத்துப்போகாமல் இருந்திருக்கிறது ஆனால் அது என் குழந்தையோ கணவரோ அப்படி நடந்தால் எப்படி மன்னிப்பேனோ அப்படி மன்னித்து மறந்திருக்கிறேன்..மணநாளுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு போனபோது நடக்க முடியாத கிராமத்து பெண்மணி போன்ற தோற்றமுடைய அவர்கள் கை பிடித்து அழைத்துச் சென்று ஒவ்வோர் உணவும் என்ன என்ன என்று சொல்லி க் கொடுத்து சாப்பிடவைத்ததை சிறு குழந்தைபோல இன்றும் நினைவு வைத்திருக்கிறார்கள்.

இப்படி அன்பை கொடுப்பதும்..விட்டு கொடுப்பதும் உறவை இன்பமயமாக்கிக் கொள்வதுமே வாழ்வின் அர்த்தமாகும்.

வல்லிசிம்ஹன் said...

கல்வெட்டு,துளசி,தருமி
இது அற்புதமான பதிவாகிவிட்டது.
ஆரம்பித்துவைத்த கண்மணிக்கு நன்றி.

இதையே இவ்வளவு விரிவாக என் குடும்பத்திலேயே நான் பேசினதில்லை.
நன்றி.

கண்மணி/kanmani said...

//சில சமயங்களில் பிரச்சனையும் ஒத்துப்போகாமல் இருந்திருக்கிறது ஆனால் அது என் குழந்தையோ கணவரோ அப்படி நடந்தால் எப்படி மன்னிப்பேனோ அப்படி மன்னித்து மறந்திருக்கிறேன்..மணநாளுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு போனபோது நடக்க முடியாத கிராமத்து பெண்மணி போன்ற தோற்றமுடைய அவர்கள் கை பிடித்து அழைத்துச் சென்று ஒவ்வோர் உணவும் என்ன என்ன என்று சொல்லி க் கொடுத்து சாப்பிடவைத்ததை சிறு குழந்தைபோல இன்றும் நினைவு வைத்திருக்கிறார்கள். //
ஹாட்ஸ் ஆப் முத்துலஷ்மி.திஸ் இஸ் த ஸ்பிரிட்.
வயதும்,முதுமையும்,படிப்பறிவும் இல்லாத காரணத்தால் மட்டுமே நம்மிடமிருந்து அந்நியப்படும் உறவுகளின் உணர்வுகளை மதித்த உங்கள் அன்பு பாராட்டுக்குறியது.அந்த மூதாட்டியின் சந்தோஷமே உங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய ஆசியாகும்.

வல்லிசிம்ஹன் said...

வல்லிசிம்ஹன் வயசு பத்தி தெரியலை..கட்சி கட்டுறதைப் பார்த்தா அவங்களும் எங்க குரூப்தானோ?!)

சந்தேகமே இல்லை தருமி.
அறுபதுக்கு ஒண்ணு குறைவு.
அவ்வளவே.

சின்னக் குழந்தைதான்.:-)

கோபிநாத் said...

அம்மாக்கள், அக்காக்கள், அண்ணன்கள் அனைவரும் அருமையாக விவாதம் நடத்துகிறீர்கள்.

இந்த தம்பி மார்களும் இங்கே தான் ஒரு ஓராமாக வுட்கார்ந்துக்கிட்டு எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு இருக்கோம்.

கண்மணிக்கா உண்மையில் அருமையான பதிவுவை இட்டமைக்கு இந்த தம்பிகளின் சார்பாக நன்றிகள் ;)

கண்மணி/kanmani said...

கோபி தம்பிகள் வேடிக்கை மட்டும் பார்க்காமல் உங்க கருத்துக்களையும் சொல்லுங்க.இன்று எங்கள் கடமையானது நாளை உங்களுக்கு.இளைய சமுதாயத்தின் பார்வைகளும் கோணமும் எப்படியென்று நாங்களும் தெரிந்து கொள்வோமே

JasmineSatyavani said...

This reminds me about my own mother-in-law. She has been living with my husband (her first child) and me for the past 18 years since my father-in-law died. Since both our older children are married and have left home, and my youngest son is also working in Hyderabad, the house has become empty. I go to work and my husband is rarely at home and she has been feeling lonely all the time. So she left for Tiruvannamalai saying that most of her children and other relatives are there and they would come and visit her and talk to her and keep her company. But since the time she went there, she has been sick and now someone has to look after her constantly. Now, she wants to come back to us. But we do not have a servant or anyone to look after her when we go to work. My husband is feeling very miserable that during her last days, he is not able to take care of her. We really need an honest servant maid or nurse maid to look after her because we can't keep her at home alone. This has created a tension in our house. My mother-in-law feels that we do not care for her and are not calling her back to Chennai. It is not that we do not care for her. We cannot look after her personally, we need someone to take care of her. May God help us.

கண்மணி/kanmani said...

jasmine you need to mk some arrangements to appoint a nurse to take care of ur mother -in-law.i know how much it will be difficult to get a servant or caretaker in cities like chennai.not only because of the cost no one may be as reliable as we expect.but it may give an un recoverable pain after her demise when you failed to take care of her.try to get a lady from thiruvannamalai or from any social service consultancies in chennai itself.to ur surprise me is having the very same problem and still more miserable too.that thing only made me to write this post. we are also seeking for such a caring person and i feel ashamed that i cant help it.may god help both of us

வல்லிசிம்ஹன் said...

Jasmine,
there are umpteen number of agencies in Chenai that give the Care Services.

they supply you with helping women for whatever time you need them.
If you look in maidservices in Sunday papers
or look into any of the Times, Mylapore times Mambalam times,Adayar Times papers
you can find them.
Hope you do contact them and follow it up.
because you should never regret ,
neglecting an old lady,
later in your lifetime.
wishing you well,
revathinarasimhan.

delphine said...

கண்மணி..
ஒரு நல்ல விஷயத்தை ப் பற்றி விவாதிக்க ஒரு platform அமைத்துக்கொடுத்தீர்கள்... நன்றி அம்மணி. different people, different angle. different views..very healthy discussion.. some very emotional indeed....
தருமி அவர்கள் சொன்னது போல' அன்பு' ஒன்று தான் நம் வாழ்வின் அடிப்படை.
நம் குழந்தை கள் நம்மை வைத்து பேணி காப்பார்கள் என்ற நம்பிக்கையிலும்...
பெற்றோர்களை நம்மால் வைத்து க் காப்பாற்ர முடியும் என்கிற நம்பிக்கையிலும் வாழ்வோமாக.
"நம்பிக்கை தானே வாழ்க்கை"!!!

delphine said...

Valli! you have to be extremely very careful when employing maid servant for old people from these so called agencies...it might be a costly mistake! you really wont know????

அபி அப்பா said...

//கண்மணி தங்கச்சி!
யார் சொன்னது முதுமை சாபம்ன்னு வரம்தான். நாம நாம நடந்துகறதுல தான் அது வரமா சாபமான்னு ஆண்டவன் முடிவு செய்வான். //

கண்மணி! நான் இப்படி ஒரு பின்னூட்டம் டைப் செய்யும் போது வ்வாச ரிசல்ட் வெளியானதால் நான் விவாதத்தில் வராமல் ஓடிவிட்டேன். ஆனால் நேத்து தங்கமணி போனில் 43 பின்னூட்டமும் முத்துகள் மாதிரி ஜொலிக்குதுன்ன சொன்ன பின்ன நான் இங்க வந்து எட்டி பாக்கும் போது நானும் இதிலே என் கருத்தை பதிகிறேன்.இன்று முடியாட்டியும் நாளையாவது என் கருத்தை சொல்கிறேன்!

Anonymous said...

good topic for discussions

கண்மணி/kanmani said...

நன்றி அபி அப்பா ,அனானி நண்பரே

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)