PAGE LOAD TIME

கடவுள் பக்தியும் பகுத்தறிவும்

கடவுள் நம்பிக்கை அல்லது பகுத்தறிவு என்ற தலைப்பு என்றும் பிரச்சினைக்குறியதாகவே இருக்கிறது.இங்கு என்னுடைய வாரத்தில் அதை என் கண்ணோட்டத்தில் மட்டுமே சொல்ல விரும்புகிறேன்.எந்த ஒரு விஷயத்தையும் ஏற்பதும் மறுப்பதும் அவரவர்க்கான உரிமை.

என்னைப் பொறுத்தவரை கடவுள் நம்பிக்கை மிக அதிகமான குடுமபத்தில் இருந்து வந்தவள் நான்.சாத்திரம் சம்பிரதாயம் என்ற வரையறைக்குள் கடவுளைப் பற்றின பயம் அதிகமாகவே என்னுள் திணிக்கப்பட்டது.

ஆனால் என் புகுந்த வீடு பகுத்தறிவு பாசறையில் பாடம் படித்து பெரியார் வழி நடக்கும் குடும்பமாக அமைந்து விட்டது.இரண்டுக்குமான சூழ்நிலையில் மனம் மதில் மேல் பூனை போல் தத்தளித்த காலங்கள் உண்டு.

முழுவதுமாக எதையும் ஏற்கவோ மறுக்கவோ முடியாமல் நான் யார் என்ற கேள்வி எனக்குள் பலமுறை எழுந்ததோடு நான் ஒரு சந்தர்ப்பவாதியோ என்று என் மீதே எனக்கு வெறுப்பு வந்த நேரங்களும் அதிகம்.

காலம் செல்ல செல்ல அனுபவம்,நடைமுறை வாழ்க்கை கற்றுத் தந்த பாடங்கள் எல்லாம் சேர்ந்து எனக்குள் ஒரு புது வழிகாட்டுதலைத் தந்தது.

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வியோ அதற்கான தேடலோ எனக்குத் தேவைப் படவில்லை.
என்னைப் பொறுத்தவரை இன்றளவும் நானும் கடவுளைக் கும்பிடுகிறேன். இதென்ன குழப்பம் என்கிறீர்களா ?எனக்காகவும் என்னைச் சுற்றி இருப்பவர்களுக்காகவும்.நம் கை மீறிப் போகும் விஷயங்களில் நோயின் கொடுமையில்,தேவைகளின் எதிர்பார்ப்பில் மனம் அலையும் போது நம் ஆசைகளைச் சொல்லும் ,அவலங்களை முறையிட தேவைப்படும் வடிகாலாக மனம் ஒரு உய்ர் சக்தியை [super power]நாடுகிறது.அதற்குப் பேர்தான் கடவுள் என்றால் நானும் கடவுளைக் கும்பிடுகிறேன்.

நமக்கு நடப்பவை யாவுமே முன்பே தீர்மாணிக்கப் பட்டவை.அது அது அதன் போக்கில் அந்தந்த நேரத்தில் நடந்தே தீரும்.அதை யார் செய்கிறார்கள் என்ற கேள்வி வரும்போதுதான் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற பிரச்சினை வருகிறது.

நமக்கும் மேலே இயங்கிக் கொண்டிருக்கும் சக்தி கடவுளாக இருந்தாலென்ன இயற்கையாக இருந்தாலென்ன?விதியாக இருந்தாலென்ன?அதற்கு என்ன பேராய் இருந்தாலென்ன?

நடப்பது நடக்க வேண்டியது நடந்து கொண்டுதானிருக்கும்.

ஆனால் மனம் துன்பப் பட்டு வருந்தும் நேரம் நாம் யாரிடம் நம் குறைகளைச் சொல்வோம்?உறவுகள்,நட்பு என்ற எல்லையைத் தாண்டி நம் வேதனைகளை யாரேனும் தீர்க்கக் கூடுமோ என்ற எதிர்பார்ப்பு ஏற்படும் போது முகம் தெரியாத கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தியை உருவகப் படுத்திக் கொண்டு நம் ஆற்றாமைக்கு ஒரு வடிகால் தேடுகிறோம்.நாம் எண்ணியது நடந்து விட்டால் அந்த சக்தியை விடாது பற்றிக் கொள்கிறோம்.அதற்கு விதம்விதமான பெயர்களையும் வழி பாட்டு முறைகளையும் நாமே ஏற்படுத்தி நடைமுறைப் படுத்துகிறோம்.
இந்தளவுடன் நிற்கும் போது கடவுள் நம்பிக்கை தப்பேயில்லை.

ஆனால் வேண்டுதல்களும் வழிபாட்டு முறைகளும் எல்லை தாண்டும்போதுதான் இது தேவையா என்ற கேள்வி எழுகிறது.

குழி மாற்று முறையும்,தலையில் தேங்காய் உடைத்து வழிபடுதலும் நரபலிகளுக்காக குழந்தைகள் கடத்தப் படுதலும் பகுத்தறிவு உள்ள யாரும் ஏற்கமுடியாததே.
இதை எதிர்ப்பது என்பது கடவுள் மறுப்பாகாது.
அதே போல வேண்டுதல் என்ற பெயரில் உண்டியலில் போடப்படும் இலட்சக் கணக்கான பணம்,வைர,தங்க நகைகள் தேவையா?கடவுள் என்ன தனக்கு வைரக் கிரீடமும் வைர வேலும் வேண்டும் என்று கேட்டாரா?
அல்லது எளிமையான பூ அலங்காரமன்றி தங்கத்தாலும் வைரத்தாலும் தினம் அலங்கரிக்கச் சொல்கிறாரா?
மனிதர்களே எளிமைக்கு மாறும் போது எளிமையை விரும்பும் போது கடவுளுக்கு ஏன் இந்த ஆபரண அலங்காரங்கள்?
வேண்டுதலுக்காகச் செய்யப் படும் நேர்த்திக் கடன்கள் ,கட்டுக் கட்டாக உண்டியலில் போடப் படும் பணம் அனாதை இல்லங்களுக்கும்,தேவைப் படும் தொண்டு நிறுவனங்களுக்கும் பயன்படட்டுமே.அப்படியும் சிலர் இந்த மாதிரி நடைமுறைகளை பின்பற்றத்தான் செய்கின்றனர்.

சின்னப் பிள்ளைகளாக இருக்கும் போது ஏதும் தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தும் என்பார்கள்.இப்போது சிந்திக்கவும் பகுத்துணரவும் முடிகின்றபோது எனக்குத் தோன்றுவது இதுதான் மனிதர்களைப் போல் பழி வாங்கவோ வெறுப்பைக் காட்டுவதாகவோ இருந்தால் அந்த ஒன்று கடவுளாக இருக்க முடியாது.

மனிதத்திற்கு மேம்பட்ட பக்குவம்தான் கடவுள்.

மனிதன் தன் இயலாமையை மனம்விட்டு வெளிப்படுத்தத் தேடும் ஒரு உருவகம்தான் கடவுள்.

மனிதனை நல்வழிப் படுத்த நேர்படுத்த உதவும் ஒரு யுக்திதான் கடவுள்.

மனிதன் மிருகமாகாமல் மனிதனாகவே இருக்க வைக்கும் முயற்சிதான் கடவுள்.

யாரும் எதுவும் செய்யலாம்.யாரும் தண்டிக்க மாட்டார்கள் என்ற சூழல் தப்பு செய்ய இடமளிக்கும் .நமக்கும் மேலே ஒரு அதிகாரி நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற பயம் நெறி பிறழ்தலில் இருந்து மனிதனைக் காக்கும் என்று ஏற்படுத்தப் பட்ட இயற்கை நியதிதான் கடவுள்.

அன்பான நெஞ்சங்கள் தரும் ஆறுதல்தான் கடவுள் அதனால்தான் அன்பே சிவமானது.

கஷ்டகாலத்தில் கை கொடுக்கும் கருணைதான் கடவுள்.அதுதான் கருணை உள்ளமே கடவுள் வாழும் இல்லமே என்று சொல்ல வைக்கிறது.

மொத்தத்தில் மனிதத்தின் கடைநிலை மிருகமென்றால்
மனிதத்தின் மேன்மை நிலையே கடவுள்.

50 மறுமொழிகள்::

Anonymous said...

யக்கா.. என்ன தத்துவ மழையா பொழியிரீங்க? ;-)

[ஃபர்ஸ்ட்டூ ப்லேஸ் இங்கேயும் விட்டுக்கொடுத்த பாசமலர்களுக்கு நன்றி] :-D

Anonymous said...

Good post!

ஜி said...

ஏன்? என்ற கேள்வியில்தான் பகுத்தறிவு பிறந்தது. அதையே அடுத்ததுத்து ஏன்? ஏன்? என்றுக் கேட்டுப் பாருங்க.. ஏதோ ஒரு சக்தி கண்டிப்பா இருக்குதுன்னு தோணும்.

Thamizhan said...

ராபர்ட் இங்கர்சால் சொல்லியது
An Honest God is the Noblest Creation of Man.

மதத் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் செய்யும் அட்டூழியங்களைப் பாருங்கள்.
மனிதரின் பயம்தான் கடவுள்'மனிதரின் நல்லெண்ணம்தான் மனித நேயம்.மனித நேய்த்துடன் மற்ரவர்கட்கு உதவுபவர்களுக்குப் பயம் வராது,கடவுள் தேவைப் பட மாட்டார்.
அதுதான் "கடவுளை மற!மனிதனை நைனை".

கோவி.கண்ணன் said...

கண்மணி அருமையான கட்டுரை 100 விழுக்காடு ஒப்புக் கொள்கிறேன்.
தலையில் தேங்காய் உடைப்பதை மூடநம்பிக்கை என்று சொல்பவர்கள், சிலைவழிபாடு எல்லாமுமே மூடநம்பிக்கைதான். ஒன்று தாழ்ந்த நம்பிக்கையாகவும் மற்றது உயர்ந்த நம்பிக்கையாகவும் சொல்லப்படுகிறது என்பதில் எனக்கும் ஒப்புதல் இல்லை.

தேங்காய் உடைத்தல், காவடி எடுத்தல், தீமிதி போன்றவைகள் ஏழைகள் செய்யும் நேர்த்திக்கடன் அதுவும் பகட்டு நம்பிக்கையான பாலாபிஷேகம் மற்றும் ஏனைய பொருள்களை தீயிலிட்டு யாகம் என்ற பெயரில் செய்யப்படும் வழிபாடும் கூட மூடநம்பிக்கையே. அங்கோர் ஏழைக்கு உணவளித்தால் உண்மையில் (இருந்தால்) ஆண்டவன் மகிழ்வான் !

கண்மணி/kanmani said...

நன்றி அபிஅப்பா
மை பிரண்ட் நீதான் ஸ்பெஷல் பர்ஸ்ட் ஆச்சே...ஹி..ஹி

சென்ஷி said...

//மொத்தத்தில் மனிதத்தின் கடைநிலை மிருகமென்றால்
மனிதத்தின் மேன்மை நிலையே கடவுள்.//

இது ரொம்ப அநியாயம்.
எந்த மிருகமும் பொறாமையில் தனக்குத்தானே அழிவைத்தேடி கொள்வதில்லை. எந்த மிருகமும் தனக்கு தன் சந்ததிகளுக்கு, சொத்து சேர்த்து வைக்க லஞ்சம், ஊழல் வாங்குவதில்லை.

தயவுசெய்து இனி மனிதனின் இழி நிலையை மிருகத்துடன் ஒப்பிட வேண்டாம்.

நம் பதிவர்களில் நிறைய பேர் சில மிருகங்களை தங்கள் பிரியங்களாக வைத்துள்ளனர். அவர்கள் இந்த பத்தியை பார்த்தால் மனம் சங்கடப்படுவார்கள்.

நல்ல பதிவு...நன்றி..

சென்ஷி

சென்ஷி said...

//கண்மணி said...
நன்றி அபிஅப்பா
மை பிரண்ட் நீதான் ஸ்பெஷல் பர்ஸ்ட் ஆச்சே...ஹி..ஹி//

அதையேத்தான் நேத்தும் நான் சொன்னேன். அதுக்கு கோச்சுக்கிட்டீங்க :(

சென்ஷி

கண்மணி/kanmani said...

ஜி நம்மை மீறிய விஷயங்கள் நடக்கும்போது ஏதோ ஒன்று இருப்பதைத்தான் சிலர் கடவுள் என்றும் சிலர் அதிர்ஷ்டம் என்றும் சிலர் இயற்கை அல்லது விதி என்றும் சொல்கிறோம்.அவரவர் நம்பிக்கை அவரவரிடம் இருக்கட்டும்.மூட நம்பிக்கைதான் வேண்டாம் என்கிறேன்.

கண்மணி/kanmani said...

தமிழன் உங்க கருத்தத்தான் கொஞ்சம் அலங்கார வார்த்தைகளுடன் நான் சொல்லியிருக்கிறேன்.
அதே நேரம் ஒருவர் உரிமையில் மற்றவர் குறுக்கிடக் கூடாது அது பொதுப் பிரச்சினையாகாதவரை.
கடவுளை நம்புவது அவரவர் உரிமை.கடவுள் மறுப்பும் அப்படியே.

ALIF AHAMED said...

கோள்களின் இயக்கங்களை காணும் போது மனிதனுக்கு மேல் ஒரு சுப்ரீம் பவர் இருக்குனு சொன்னது

ஐஸ்டின்

அபி அப்பா said...

எனக்கு மட்டும் சின்ன பதிலா? நான் என் தலையில் தேங்காய் உடைச்சுக்கறேன்ன்னு வேண்டிப்பேன், ஜாக்கிரதை! எனக்கும் பெரிய பதிலா வேண்டும்:-))

கண்மணி/kanmani said...

அபி அப்பாவுக்கு75%மின்னுது மின்னலலுக்கு 25% இந்த பதில்:

காந்தத்துக்கிட்ட இரும்பக் கொண்டு போங்க கப்புனு இழுக்கும்.இந்த மாதிரி கவர்ச்சிவிசை அறிவியல் சார்ந்த இயற்கை நியதி.கோள்களின் சுழற்சியும் அப்படியொரு கவர்ச்சி விசையில்தான் செயல்படுகிற்து.
ஒரு அணுவில் எப்படி எலக்ட்ரான்கள் உட்கருவைச் சுற்றி வட்டப் பாதையில் சுற்றுகிறதோ அப்படி.
உண்மையான மனித நேயம் அன்பு கருணை உதவும் மனப் பான்மையே நம்மைக் காக்கும் கடவுள்.
கடவுள்=கட+உள்
நம்முள் இருக்கும் எல்லாத் தீய குணங்களையும் ஆசைகளையும் கடந்தால் உள்ளே இருப்பது கடவுள்.இதுவே தத்துவ ஞானிகளின் கூற்று.

Anonymous said...

கட்டுரை மிக அருமை. அதிலும் கடைசி வரிகள் 'நச்'.
//மொத்தத்தில் மனிதத்தின் கடைநிலை மிருகமென்றால்
மனிதத்தின் மேன்மை நிலையே கடவுள்.//

மேலும் சென்ஷி சொல்வது போல்

//இது ரொம்ப அநியாயம்.
எந்த மிருகமும் பொறாமையில் தனக்குத்தானே அழிவைத்தேடி கொள்வதில்லை. //

சில மிருகங்கள் ரொம்ப நல்லவைகள்.

அதனால்தான் என்னவோ குர்ஆனிலும்
'மிருகங்களை விடத் தாழ்ந்தவர்கள்'
என்றே சொல்லப் பட்டிருக்குறது.மேலும்
மனிதப் புனிதர்கள் 'கடவுளாக முடியாது' மாறாக தேவர்கள்/வானவர்களை விட மேலானவர்கள் என்றும் வந்துள்ளது.

இறைவன் இருக்கின்றானா இல்லையா என்பதை அறிய 'வேத' நூற்களைப்
படிப்பதாலும் அறிஞர் பெருமக்க்களின் நூற்களைப் படிப்பதாலும் புரிந்து கொள்ளலாம்.

ALIF AHAMED said...

உண்மையான மனித நேயம் அன்பு கருணை உதவும் மனப் பான்மையே நம்மைக் காக்கும் கடவுள்.
கடவுள்=கட+உள்
நம்முள் இருக்கும் எல்லாத் தீய குணங்களையும் ஆசைகளையும் கடந்தால் உள்ளே இருப்பது கடவுள்
///


தத்துவஞானி கண்மனி தத்துவ எண் : 000010/2007


தள அக்கொண்ட்ட செக் பண்னு...:)

சந்திப்பு said...

கண்மணி வாழ்த்துக்கள்! இப்படிப்பட்ட தலைப்பில் எழுத வேண்டும் என்றாலே அதற்கு ஒரு துணிவு வேண்டும். இது ஒரு யதார்த்தமான பதிவு. குறிப்பாக மனிதனின் உள்மனத் தேடலுக்கு வடிகால் தேடும் பதிவு என்று கொள்ளலாம். அதே சமயம் பெரியாரின் பகுத்தறிவுவாதம் - நாத்திகவாதம் வறட்டுத்தனமான நாத்திகவாதமாக இருந்ததால்தான் அது வெற்றி பெறவில்லை. அவரைப் பின்பற்றுவதாக கூறும் திராவிட இயக்கங்கள், நாத்திக வாதத்தை கை விட்டு விட்டன. குறிப்பாக அண்ணா அவர்களே, ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற முழக்கத்தை முன் வைத்து பெரியாரின் சமகாலத்திலேயே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். குறிப்பாக பெரியாரின் பல்வேறு முற்போக்கான கருத்துக்கள் சமூகத்தில் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அம்சமே! அதே சமயம், மக்களின் வறுமைக்கும், துயரத்திற்கும் தீர்வு காணாத எந்த தத்துவமும் உயிரோடு இருக்க முடியாது. அந்த அடிப்படையில், மக்களின் துயரங்களின் வடிகாலே கடவுள் கோட்பாடு, இதனைத்தான் மார்க்சிய ஆசான், காரல் மார்க்சு மதம் பற்றி இவ்வாறு கூறுகிறார்:

“மதம் என்பது அபினைப் போன்றது. அது ஆத்மா இல்லாத உலகில் ஆத்மா; இதயமற்ற உலகில் இதயம், அது ஏழைகளின் ஏக்கப் பெருமூச்சு; அனாதரவானர்களுக்க ஆதரவு சக்தி”

இந்த கண்ணோட்டம் தங்களிடம் பிரபலிப்பதை உணர முடிகிறது. இன்றைய சமூகத்தில் தீர்வு காணப்பட வேண்டிய முதன்மையான விஷயம். வறுமையும் - ஏழ்மையுமே! இந்தியாவில் சென்னை போன்ற நகரப் பகுதிகளிலேயே மிகக் கடுமையான ஏற்றத்தாழ்வான சமூக அமைப்புகள் உள்ளது. வறுமையில் உச்சத்தில் இருப்பவர்களும் - வசதியின் உச்சத்தில் வாழ்பவர்களும் ஒருசேர வாழும் நகரமே சென்னை. இதில் பெரும்பான்மையினர் ஏழைகள். அதே போல் நடுத்தர வர்க்க சமூகம் ஆத்திகம் - நாத்திகம் போன்ற கண்ணோட்டத்தில் மாட்டிக் கொண்டு இந்தப் பக்கத்திற்கும், அந்தப் பக்கத்திற்கும் தாவிக் கொண்டிருக்கிறது. எனவே, ஓரளவு வசதி படைத்த நடுத்தர வர்க்கம் தனக்கு கீழே இருக்கும் ஏழைகளின் துயர் துடைப்பதற்கு, அவர்களின் ஆத்ம நாயகனாக பாடுபடுவதற்கு முன்வருவதே உண்மையான பகுத்தறிவாக இருக்க முடியும். வாழ்த்துக்கள் கண்மணி.

குட்டிபிசாசு said...

கடவுளுக்கு பயந்து ஒருவன் தவறு செய்யாமல் இருந்தால், அது தற்காலிகமாகவே இருக்கும். தான் செய்வதை ஒருவன் உணர்ந்து செய்யவேண்டும். ஆனால் இதை குழந்தைகளுக்கு கூறயிலாது. காலப்போக்கில் குழந்தைகளுக்கு தெளிவாக எடுத்துச்சொல்லவேண்டும். இல்லையென்றால், வருங்காலத்தில் நாம் கூறியவற்றை கண்மூடித்தனமாக செயல்படுத்துவார்கள். இன்றைய சாதி,மதம்,சம்பிரதாயம் எல்லாம் இவ்வாறு கண்மூடித்தனமாக செயல்படுத்தித் தோன்றியவையே!

Ayyanar Viswanath said...

/நம் பதிவர்களில் நிறைய பேர் சில மிருகங்களை தங்கள் பிரியங்களாக வைத்துள்ளனர். அவர்கள் இந்த பத்தியை பார்த்தால் மனம் சங்கடப்படுவார்கள்.
ரொம்ப டேங்க்ஸ் சென்ஷி

ஆமாம் கண்மணி கேவலம் இந்த மனுச பயலுகள மிருகங்களோடு ஒப்பிடாதீங்க..மத்தபடி பதிவு சூப்பர்
:)

delphine said...

NO COMMENTS.......BUT WELL WRITTEN.......

Unknown said...

நல்ல பதிவு.
பதிவு தொடர்பாக என் எண்ணத்திலிருந்து ஒரு சில.

//மனிதர்களைப் போல் பழி வாங்கவோ வெறுப்பைக் காட்டுவதாகவோ இருந்தால் அந்த ஒன்று கடவுளாக இருக்க முடியாது//
//நமக்கும் மேலே ஒரு அதிகாரி நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற பயம் நெறி பிறழ்தலில் இருந்து மனிதனைக் காக்கும் என்று ஏற்படுத்தப் பட்ட இயற்கை நியதிதான் கடவுள்//

கடவுள் இவ்வுலகத்தில் நல்லவர் தீயவர் அனைவருக்கும் நன்மையே செய்யும். உன் இறப்புக்கு பின்னுள்ள வாழ்க்கையில், நீ நல்லவற்றை செய்திருந்தால் உனக்கு நன்மையும், நீ தீயவை செய்தருந்தால், அதற்காக உனக்குத் தண்டணையும் தரும் என்று சொல்கிற கடவுள் பழி வாங்குபவரா அல்லது மனிதம் திருந்த வழி செய்கிறவரா?

நமக்கும் மேலே இருக்கும் அதிகாரி நாம் என்ன செய்தாலும் கண்டுக்க மாட்டார். நமக்கு நல்லது மட்டுமே செய்வார். இத்தகைய மேலதிகாரியைப் பார்த்து நெறி பிறழ்தலில் இருந்து மனிதன் மாறுவானா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கண்மணி டீச்சர்...மாரல் க்ளாஸ் நடுவுல போறாளே பிடிக்காதோன்னு நினைக்காதீங்க...தொடர்ந்த உங்கள் நட்சத்திர வாரத்துக்கு இன்றே வாழ்த்து சொல்லிக்கிறேன்...நாளைக்கப்புறம் நமக்கு விடுமுறைஆரம்பிக்குது..வர்டா ...

கோபிநாத் said...

அருமைக்கா ;-) மிக மிக நல்ல பதிவு

\\மனிதத்திற்கு மேம்பட்ட பக்குவம்தான் கடவுள்.

மனிதன் தன் இயலாமையை மனம்விட்டு வெளிப்படுத்தத் தேடும் ஒரு உருவகம்தான் கடவுள்.

மனிதனை நல்வழிப் படுத்த நேர்படுத்த உதவும் ஒரு யுக்திதான் கடவுள்.

மனிதன் மிருகமாகாமல் மனிதனாகவே இருக்க வைக்கும் முயற்சிதான் கடவுள்.\\

நல்ல கருத்துக்கள்....இந்த ஒவ்வொரு வரிகளிலும் உள்ள உண்மையான கருத்தை புரிந்து கொண்டாலே போதும். கடவுள் பிரச்சனைக்கு ஒர்அளவுக்கு முற்றுப்புள்ளி கிடைத்துவிடும்.

கோபிநாத் said...

\\சென்ஷி said...
//கண்மணி said...
நன்றி அபிஅப்பா
மை பிரண்ட் நீதான் ஸ்பெஷல் பர்ஸ்ட் ஆச்சே...ஹி..ஹி//

அதையேத்தான் நேத்தும் நான் சொன்னேன். அதுக்கு கோச்சுக்கிட்டீங்க :(

சென்ஷி\\

ரீப்பிட்டேய் ;(

கண்மணி/kanmani said...

சென்ஷி மிருகங்களிலும் காட்டுவிலங்கு வீட்டு விலங்குன்னு பாகுபாடு இருக்கு.
மை பிரண்ட் என் நட்சத்திர வாரத்திற்கு ஸ்பெஷல் பர்ஸ்ட்.அது எப்படின்னு சொல்ல மாட்டேன் சிதம்பர ரகசியமாக்கும்.

கண்மணி/kanmani said...

நன்றி கோ.வி.கண்ணன்.
நான் சாடுவது மூட நம்பிக்கைகளை என்பதைப் புரிந்து கொண்டால் இந்தப் பதிவு யாரையும் நோகடிக்காது.

Jazeela said...

ரொம்ப தெளிவாக அருமையாக எழுதியிருக்கீங்க. வாழ்த்துகள். மாயாவி படத்துல வர 'கடவுள் தந்த அழகிய வாழ்வு' பாட்டு நினைவுக்கு வருது. ;-)

கண்மணி/kanmani said...

நன்றி இப்னுஜுபைர்
மதம் பற்றியும் சொல்ல நினைத்தேன்.வேண்டாம் என்று விட்டேன்.எந்த மதமானாலும் தேடும் மார்க்கம் ஒன்றே.அதில் கடவுள்களும் வழிபாட்டுமுறைகளும் மாறலாம்.நான் சாடுவது அதீதமான மூடப் பழக்கங்களை.

தென்றல் said...

/எனக்காகவும் என்னைச் சுற்றி இருப்பவர்களுக்காகவும்.நம் கை மீறிப் போகும் விஷயங்களில் நோயின் கொடுமையில்,தேவைகளின் எதிர்பார்ப்பில் மனம் அலையும் போது நம் ஆசைகளைச் சொல்லும் ,அவலங்களை முறையிட தேவைப்படும் வடிகாலாக மனம் ஒரு உய்ர் சக்தியை [super power]நாடுகிறது.அதற்குப் பேர்தான் கடவுள் என்றால் நானும் கடவுளைக் கும்பிடுகிறேன்.
/
அருமை, கண்மணி! உங்கள் பதிவும் அதற்கான மறு மொழிகளும்...

//அய்யனார் said...
ஆமாம் கண்மணி கேவலம் இந்த மனுச பயலுகள மிருகங்களோடு ஒப்பிடாதீங்க..//

எல்லாரும் "ஒரே" முடிவோடதான் இருக்காங்க!

கண்மணி/kanmani said...

டெல்பின் சத்தியமாய் உங்களிடம் இந்த பதிலைத்தான் எதிர்பார்த்தேன்.
நீங்க எல்லாம் அதீத நம்பிக்கை கொண்டவர்கள்.
யாரும் மனம் வருந்த இப்பதிவு எழுதவில்லை.என் கண்ணோட்டம் என்றே கூறுகிறேன்.
எனக்குத் தேவைப்படும்போது தேவனின் கிருபையையும் நாடுவேன்.

கண்மணி/kanmani said...

சந்திப்பு வருகைக்கு நன்றி.உங்கவாதம் சரியே.
என்னைப் பொறுத்தவரை கடவுளை நம்புவது அவரவர் விருப்பம் என்றேன்.
அதற்காக கடவுளை நம்புபவன் முட்டாள்.
கடவுளைக் கும்பிடுபவன் காட்டுமிராண்டி எனும் கோஷத்தில் உடன்பாடு இல்லை.
உண்மையில் அடுத்தவர் உரிமையில் தலையிடுவதுதான் காட்டுமிராண்டித்தனம்.
மனிதனுக்குப் பயன்படாத எந்த சித்தாந்தமும் வலுவிழந்துதான் போகும்.

கண்மணி/kanmani said...

ஜெசிலா இன்னைக்குத்தான் அந்தப் பாட்டை கேபிளில் கேட்டேன்.எத்தனை அருமை.முழுப்பாடலும் தெரிந்தால் நிச்சயம் கோட் பண்ணியிருப்பேன்.நெகிழ்வான பாடல்.

கண்மணி/kanmani said...

வாங்க தென்றல்.கண்மணிஅக்கா கருத்த யாராச்சும் மறுக்க முடியுமா?ஹி...ஹி...அதிலும் இது கத்தி மேல் நடப்பது போன்றது.மேலும் இது அத்தனையும் என் கோணம் என்பதில் தவறென்ன சொல்லமுடியும்.என்வழி எனக்கு.[தப்பிக்க ஒரு ஆயுதம் ஹி..ஹி]
அப்புறம் இந்த கிடேசன் பார்க் கூட்டம் ஒரு தினுசாத்தான் இருக்காங்க.[அய்யனார் நீங்கலாக]

தென்றல் said...

/delphine said...
NO COMMENTS.......BUT WELL WRITTEN......./
//கண்மணி said...
டெல்பின் சத்தியமாய் உங்களிடம் இந்த பதிலைத்தான் எதிர்பார்த்தேன்.
நீங்க எல்லாம் அதீத நம்பிக்கை கொண்டவர்கள்.
//

வணக்கம், Delphine!

/மனிதத்தின் மேன்மை நிலையே கடவுள்./
எனக்கும் இந்த கருத்தில் உடன்பாடில்லை. இது கண்மணியின் தனிப்பட்ட கருத்து.

சமூக நிகழ்வுகளும், வாழ்க்கையில் சந்திக்கும் சில மனிதர்கள்/நிகழ்வுகள் மூலம் நாம் கடவுளை நோக்கி செல்கிறோம் அல்லது விலகிறோம்.

ஒரு பக்கம் அன்னை தெரசா, 'உதவும் கரங்கள்' வித்யாசகர் என்றால் மறுபக்கம் (சில) சாமியார்களின் போலி வாழ்க்கை, (சில) பாதிரியார்களின் 'சாதி' கோட்பாடுகள் ...
இவர்களை நான் குறிப்பிட காரணம் இவர்களைப் போன்றவர்களே படிப்பறிவுள்ள 'middle class' குடும்பத்திற்கு நேரிடையாக தொடர்பு உள்ளவர்கள். நம்பி ஏமாற்றப்படுபவர்கள். படிப்பறிவில்லாத சகோதர/சகோதரிகளை பற்றி சொல்லவே தேவையில்லை....

அன்பே சிவமா? சிவமே அன்பா? னா, அன்புதான் சிவம்.
புதிய ஏற்பாட்டில் வரும் அந்த வழிப்போக்கனின் உயிரை காப்பாற்றியது ஒரு சமாரியன் (சமானியன் !!?). அவனை கடந்து சென்ற செல்வந்தனும் இல்லை, பாதிரியாரும் இல்லை.

ம்ம்ம்.. நீங்க 'NO COMMENTS' -னு சொல்லிடீங்க!
உங்கள் கருத்தையும் சொல்லிருந்தால் நன்றாக இருந்திருக்கும். I take the privilege to ask you.
தவறிந்தால் மன்னிக்கவும்.

Anonymous said...

/***கடவுள் நம்பிக்கை அல்லது பகுத்தறிவு என்ற தலைப்பு என்றும் பிரச்சினைக்குறியதாகவே இருக்கிறது.இங்கு என்னுடைய வாரத்தில் அதை என் கண்ணோட்டத்தில் மட்டுமே சொல்ல விரும்புகிறேன்.எந்த ஒரு விஷயத்தையும் ஏற்பதும் மறுப்பதும் அவரவர்க்கான உரிமை. ***/

But பகுத்தறிவு பாசறையில் பாடம் படித்து means make fun of only Hindus and Other than Hindu's all the religions are good. Thats what going on now...


/***கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வியோ அதற்கான தேடலோ எனக்குத் தேவைப் படவில்லை.
என்னைப் பொறுத்தவரை இன்றளவும் நானும் கடவுளைக் கும்பிடுகிறேன். இதென்ன குழப்பம் என்கிறீர்களா ?எனக்காகவும் என்னைச் சுற்றி இருப்பவர்களுக்காகவும்.நம் கை மீறிப் போகும் விஷயங்களில் நோயின் கொடுமையில்,தேவைகளின் எதிர்பார்ப்பில் மனம் அலையும் போது நம் ஆசைகளைச் சொல்லும் ,அவலங்களை முறையிட தேவைப்படும் வடிகாலாக மனம் ஒரு உய்ர் சக்தியை [super power]நாடுகிறது.அதற்குப் பேர்தான் கடவுள் என்றால் நானும் கடவுளைக் கும்பிடுகிறேன். ***/

/*** வேண்டுதல்களும் வழிபாட்டு முறைகளும் எல்லை தாண்டும்போதுதான் இது தேவையா என்ற கேள்வி எழுகிறது.

குழி மாற்று முறையும்,தலையில் தேங்காய் உடைத்து வழிபடுதலும் நரபலிகளுக்காக குழந்தைகள் கடத்தப் படுதலும் பகுத்தறிவு உள்ள யாரும் ஏற்கமுடியாததே. இதை எதிர்ப்பது என்பது கடவுள் மறுப்பாகாது. ***/
This is true

/*** அதே போல வேண்டுதல் என்ற பெயரில் உண்டியலில் போடப்படும் இலட்சக் கணக்கான பணம்,வைர,தங்க நகைகள் தேவையா?கடவுள் என்ன தனக்கு வைரக் கிரீடமும் வைர வேலும் வேண்டும் என்று கேட்டாரா?
அல்லது எளிமையான பூ அலங்காரமன்றி தங்கத்தாலும் வைரத்தாலும் தினம் அலங்கரிக்கச் சொல்கிறாரா?
மனிதர்களே எளிமைக்கு மாறும் போது எளிமையை விரும்பும் போது கடவுளுக்கு ஏன் இந்த ஆபரண அலங்காரங்கள்?
வேண்டுதலுக்காகச் செய்யப் படும் நேர்த்திக் கடன்கள் ,கட்டுக் கட்டாக உண்டியலில் போடப் படும் பணம் அனாதை இல்லங்களுக்கும்,தேவைப் படும் தொண்டு நிறுவனங்களுக்கும் பயன்படட்டுமே.அப்படியும் சிலர் இந்த மாதிரி நடைமுறைகளை பின்பற்றத்தான் செய்கின்றனர். ***/

When you have money, buying gold, bungalow, big lawn, a tennis court, a Sport utility Vehicle, a 'Pleasure' Car.....

So everyone in the world not eating enough food why do you need a 'Pleasure' Car and a Bungalow with a lawn, dance party....

Is it not enough to have a small house and a simple car/Motorcycle.

All the above gives satisfaction in your life.
If I get a money I will buy some good car so that my daughter can enjoy this b'cos she is most important in my life. Another friend his wife is important. Another frind wants have a car to show his wealth to get frindship with wealthy people. Another friend every week goes to temple so he wants to build better temple with lots new things to God b'cos every week he is seeing the god. My wife spends 5% annual take home salary to Schools every year. We are doing this for last 17 years.
So all comes to satisfaction. I put money to god so that my satisfaction that I willmake sure God gets by helping pooja everyday and Every occasion.

/*** மனிதத்திற்கு மேம்பட்ட பக்குவம்தான் கடவுள்.***/

மனிதன் தன் இயலாமையை மனம்விட்டு வெளிப்படுத்தத் தேடும் ஒரு உருவகம்தான் கடவுள்.
This is not true. When human started belive nature, he gave identity which is god.

மனிதனை நல்வழிப் படுத்த நேர்படுத்த உதவும் ஒரு யுக்திதான் கடவுள்.
மனிதன் மிருகமாகாமல் மனிதனாகவே இருக்க வைக்கும் முயற்சிதான் கடவுள்.
This is true

யாரும் எதுவும் செய்யலாம்.யாரும் தண்டிக்க மாட்டார்கள் என்ற சூழல் தப்பு செய்ய இடமளிக்கும் .நமக்கும் மேலே ஒரு அதிகாரி நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற பயம் நெறி பிறழ்தலில் இருந்து மனிதனைக் காக்கும் என்று ஏற்படுத்தப் பட்ட இயற்கை நியதிதான் கடவுள்.

அன்பான நெஞ்சங்கள் தரும் ஆறுதல்தான் கடவுள் அதனால்தான் அன்பே சிவமானது.

கஷ்டகாலத்தில் கை கொடுக்கும் கருணைதான் கடவுள்.அதுதான் கருணை உள்ளமே கடவுள் வாழும் இல்லமே என்று சொல்ல வைக்கிறது.

மொத்தத்தில் மனிதத்தின் கடைநிலை மிருகமென்றால்
மனிதத்தின் மேன்மை நிலையே கடவுள்.


Who is really having greatness about god (I am not talking about who acts like that).

Conclusion:- No one in the world is always god/Devil, everyone trying to be god. Only Gods can guide us to reach their feet.

Whenever one truely helps someone who is in need he is god that needy person. Whenever one who hurts other feelings he is devil on that time.

Chinnappan.
I am a god loving person never had any anger with everyone My satisfaction is important.

துளசி கோபால் said...

//சின்னப் பிள்ளைகளாக இருக்கும் போது ஏதும் தப்பு
செய்தால் சாமி கண்ணைக் குத்தும் என்பார்கள்.
இப்போது சிந்திக்கவும் பகுத்துணரவும் முடிகின்றபோது
எனக்குத் தோன்றுவது இதுதான் மனிதர்களைப் போல்
பழி வாங்கவோ வெறுப்பைக் காட்டுவதாகவோ இருந்தால்
அந்த ஒன்று கடவுளாக இருக்க முடியாது.//

கடவுள் என்ன வாத்தியாரா? அடி பின்னறதுக்கு!( இப்பெல்லாம் வாத்தியாருங்க
புள்ளைங்களை அடிக்கக்கூடாதுன்றது வேற இருக்குல்லே)

ஆனா........ மனுஷன் செய்யற ஒவ்வொரு தப்புக்கும் தண்டனைன்னு கொடுக்க
ஆரம்பிச்சாருன்னா ஒரு மனுஷன் உலகில் மிஞ்சமாட்டான்.


//தயவுசெய்து இனி மனிதனின் இழி நிலையை மிருகத்துடன்
ஒப்பிட வேண்டாம்..............//

சென்ஷி சொன்னதுக்கு நானும் ரிப்பீட்டே:-)

பாவங்க அதுங்க. அன்பை மட்டுமே திருப்பி வழங்கும் உயிர்கள்.

அன்பே கடவுள்.

சாலிசம்பர் said...

//உண்மையில் அடுத்தவர் உரிமையில் தலையிடுவதுதான் காட்டுமிராண்டித்தனம்.//

கண்மணி ,இதை பொதுவாக நீங்கள் சொன்னாலும் பெரியாருக்கு தான் அதிகம் பொருந்தும்.அதனால் கடவுள் பற்றிய பெரியாரின் இன்னொரு பார்வை உங்கள் பார்வைக்கு.

"உருவமற்ற கடவுளை, யாரையும் ஒன்று போல் சிருஷ்டிக்கும் கடவுளை, காசு, பணம், செலவு செய்யாமல் வணங்கக்கூடிய கடவுளை, மூடநம்பிக்கைக்கு இடமில்லாத தன்மையில் யாரும் வணங்கலாம்"

மற்றபடி உங்கள் பதிவில் முழுதும் உடன்படுகிறேன்.எண்ணங்களை எழுத்தில் வடிப்பது இயல்பாக வருகிறது உங்களுக்கு.வாழ்த்துக்கள்.

சாலிசம்பர் said...

//அது ஆத்மா இல்லாத உலகில் ஆத்மா; இதயமற்ற உலகில் இதயம்//

மார்க்ஸ் சொன்னதை புரட்டு வார்த்தைகளில் சொல்கிறார் சந்திப்பு.இது மார்க்ஸ் பற்றிய தவறான புரிதலை வாசகர்களுக்கு ஏற்படுத்தும்.

மார்க்ஸ் சொன்னது
"அது ஆத்மா இல்லாத உலகின் ஆத்மா; இதயமற்ற உலகின் இதயம்"

கண்மணி/kanmani said...

வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி ஜாலி ஜம்பர்.
இந்தப் பதிவைக்கூட பொறுத்துக் கொள்ள முடியாமல்[ - ]குத்தும் மனிதர்களை என்னென்பது.
கடவுளைக் கும்பிடு என்றோ,
கடவுளைக் கும்பிடாதே என்றோ
சொன்னேனா?என் சொந்த கருத்துக்களுக்கும் காழ்ப்பு காட்டும் மனிதர்களும் இருக்கிறார்கள்.பரவாயில்லை.லேசான வருத்தம் மட்டுமே எனக்கு.

கண்மணி/kanmani said...

ஆனா துளசிக்கா தப்பு செஞ்சா கடவுள் தண்டிப்பார்னு சொல்லித்தானே வளர்க்கிறாங்க.

delphine said...

Thanks Thendral...
I prefer to be silent... I repeat.. SILENCE...:)

கண்மணி/kanmani said...

தென்றல் நான் எப்படி போலிச் சாமியார்களை மேன்மையடைந்த தெய்வநிலை பெற்றவர்கள் என்பேன்
மதர் தெரசாவுடன் யாரையும் ஒப்பிடாதீர்கள்.அவருக்கு யாரும் ஈடாகமுடியாது.
நான் சொன்ன 'மேன்மை'இன்றைய ஞானிகளிடம் சத்தியமாய் இல்லை.
புத்தர்,ரமணர்,அன்னை தெரசா,பரமஹம்சர்,அரவிந்தர் போன்றவர்க்குப் பொருந்தும்

கண்மணி/kanmani said...

யூ டூ டெல்பின் கண்மணியென்ன அவ்வளவு மோசமா?உங்க கருத்தைச் சொன்னா கோச்சுக்கவாப் போறேன்?
வருத்தமாயிருக்கு.

தென்றல் said...

//delphine said...
Thanks Thendral...
I prefer to be silent... I repeat.. SILENCE...:)
//

no hard feelings, Delphine! I respect you... esp. 'your SILENCE'.

Anonymous said...

Kanmanniamma,

now only i started reading your site - nalla eluthiringa - that too the last one i.e conclusion - superb
manithan

சிறில் அலெக்ஸ் said...

//An Honest God is the Noblest Creation of Man.//

wow

வெட்டிப்பயல் said...

அருமையான கட்டுரை :-)

கண்மணி/kanmani said...

நன்றி அனானி. ஏதோ எனக்குத் தோன்றியது பதிவாகி இருக்கு.

கண்மணி/kanmani said...

thanks sril alex.
god is no where என்பதை கொஞ்சம் மாற்றி
god is now here ன்னு எழுதினானாம் ஒருவன் ஏன்?
god is nothing but our goodness and hope

கண்மணி/kanmani said...

@ வெட்டி நன்றி பாலாஜி

Haran said...

//மனிதர்களைப் போல் பழி வாங்கவோ வெறுப்பைக் காட்டுவதாகவோ இருந்தால் அந்த ஒன்று கடவுளாக இருக்க முடியாது.

மனிதத்திற்கு மேம்பட்ட பக்குவம்தான் கடவுள்.

மனிதன் தன் இயலாமையை மனம்விட்டு வெளிப்படுத்தத் தேடும் ஒரு உருவகம்தான் கடவுள்.

மனிதனை நல்வழிப் படுத்த நேர்படுத்த உதவும் ஒரு யுக்திதான் கடவுள்.

மனிதன் மிருகமாகாமல் மனிதனாகவே இருக்க வைக்கும் முயற்சிதான் கடவுள்//

நல்ல ஒரு பதிவு. கடவுளிற்கு நீங்கள் கூறிய வரைவிலக்கணம் கூட எனக்கு மிகவும் பிடித்துள்ளன....எனது மதம் பற்றிய பதிவு பார்க்க: http://gowrykaran.blogspot.com/2007/05/blog-post_17.html

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)