PAGE LOAD TIME

வெட்கங்கெட்டவர்கள்


ண்ணீரின் தாரைக் கன்னத்தில் இறங்கிக் கறையாகப் படிந்து விட்டிருந்தது.இரவெல்லாம் உறக்கம் வராமல் அழுததில் தலை பாரம் கூடிப் போயிருந்தது.இதொன்றும் புதிது இல்லை.
திருமணமான இந்த பத்து வருடங்களில் வாரம் ஒருமுறையேனும் இப்படி நடந்து கொண்டுதானிருக்கிறது.
திருமணமான புதிதில் இருந்த விட்டுக் கொடுத்தல் என்பதோ புரிந்து கொள்ளுதல் என்பதோ அடியோடு காணாமல் போய்விட்டது.

இரண்டு பேரும் முதலில் சந்தித்ததே ஒரு இரயில்பயணத்தின் போதுதான்.கணிணியில் முன்பதிவு செய்துவிட்டு ஒரு நேர்காணலுக்காக சென்னை செல்லக் கிளம்பியபோது அடையாளக் குறிப்பிற்காக வாக்களர் அட்டை,வருமான வரி அட்டையென எதுவும் எடுக்காமல் சென்று திண்டாடிப் போக, டிக்கெட் பரிசோதகரிடம் தன் மனைவி என்றும் தனித் தனியாக டிக்கெட் போட நேர்ந்து விட்டது என்றும் சமாளித்தான்.
திகைத்தவளிடம் பலமுறை மன்னிப்புக் கேட்டான்.அவனே நேர்காணலுக்கு அழைத்துச் சென்றதிலிருந்து திரும்ப ஊருக்குப் போகும்வரை பல உதவிகள்.
அவனிடமிருந்து மீண்டும் மீண்டும் மன்னிப்பு கைப்பேசி மூலமாக.வேலை கிடைத்ததும் துணைக்கு வரச் சொல்ல திகைப்புடன் சம்மதித்தான். இந்தமுறை வேண்டுமென்றே அடையாள அட்டையை எடுத்துப் போகவில்லை.
டிக்கெட் பரிசோதகரிடம் சென்றமுறை அவன் சொன்ன காரணத்தையே சொன்னபோது வார்த்தைகளுக்குத் தேவையின்றி இருவருக்குமான காதல் விளங்கியது.

பலவிதங்களில் அவள் மனதைக் கவர்ந்தவந்தான் இப்போது ஒன்றுமில்லாததெற்கெல்லாம் சண்டை போட்டு அடிக்கடி அழவைக்கிறான்.
தொலைபேசியில் குமுறும் போதெல்லாம் நீதான் கொஞ்சம் அனுசரிச்சுப் போகனும்மா எனும் அம்மாவின் வார்த்தைகள்

தப்பே செய்யாத போதும் கூட ஏன் நான் மட்டும் அடங்கிப் போகனும்

இது அடங்கிப் போவது என்றில்லை.யாராவது விட்டுக் கொடுக்க வேணும் தானே

ஏன் அவர் விட்டுக் கொடுக்கட்டுமே.ஆம்பிளை என்றால் எது செய்தாலும் பொம்பளைங்க என்ன ஏதுன்னு கேட்கக் கூடாதா

பிரச்சினை என்றுமே பெரிதாக இருந்ததில்லை.

கொஞ்சம் சீக்கிரம் கிளம்பினால் என்ன?எனக்கு நேரமாகிறது

நானும் எழுந்ததிலிருந்து வேலை செய்து கொண்டுதானிருக்கிறேன்.கொஞ்சம் ஒத்தாசை பண்ணாமல் வெட்டி அதிகாரம் ஏன்?

மோட்டர் போட்டு எவ்வளவு நேரமாச்சு .பார் தண்ணீர் வழிகிறது நிறுத்தித் தொலையேன்;

என்னைக் குறை சொல்லும் நேரத்தில் நீங்க நிறுத்துங்களேன்;

அதை எங்கே வைத்தாய் தேடிக் கொடு;நீங்களே தேடினாலும் கிடைக்கும் தேடுங்க;

பையன் ஸ்கூலில் பேரண்ட்ஸ் மீட்டிங் போயிட்டு வந்துவிடு;

ஏன் நீங்களும் அவனுக்கு அப்பா தானே போயிட்டு வாங்களேன்;

எவ்வளவு நேரமாக மணியடிக்கிறது அந்த ஃபோனை எடேன்;

பேப்பர் படிப்பதை விட்டு நீங்க வரமுடியாது ஆனால் நான் மட்டும் இருக்கிற வேலையைப் போட்டுட்டு ஓடி வரனும்.எனக்கு மட்டும் என்ன நாலு கையா?

திட்டமிட்டு எதுவும் நிகழ்வதில்லை என்றாலும் சின்னச் சின்ன வாக்குவாதங்கள் அப்படியே குரல் உயர்ந்து சண்டையாக மாறும்போது யார் முதலில் தணிந்து போவது என்பதில்தான் சிக்கல்.கொஞ்ச நாளுக்குப் பேச்சு வர்த்தை ஏதுமின்றி அமைதியாக எல்லாம் இயந்திர கதியில் நடக்கும்.சரியாகவும் நடந்து விடும்.இது ஏன் பேசும்போது மட்டும் சாத்தியப்படுவதில்லை என்பது புரியாத புதிராகத் தொன்றும்.

ஆரம்ப நாட்களில் எவ்வளவோ விட்டுப் பிடித்தாலும் இதுவே வாடிக்கையான பிறகு மனம் வெறுத்துப் போகிறது.நேரிடையாக கண்ணீர் சிந்தவும் சுய பச்சாதாபம் இடம் கொடுக்காததால் இரவின் நீண்ட தனிமையில் துக்கம் வடிகிறது.

எம் புருசன் குடிச்சிட்டு வந்து நல்லா உதைக்கும்மா.இருந்தாலும் எல்லாத்தையும் பொறுத்துக் கொண்டுதான் குடும்பம் நடத்துகிறேன்.புள்ளைங்களை கரை சேர்க்கனுமே அனுசரிச்சுப் போகனும் தாயீ என்பாள் வேலைக்காரம்மா

நீ பத்தாம்பசலி படிக்காதவள்.நான் அப்படியில்லை.என்னால் என் காலில் நிற்க முடியும்.யாரையும் சார்ந்து இருக்க வேண்டும் என்ற தேவை எனக்கு இல்லை

எல்லார் வீட்டிலும் இப்படித்தான்.நானும் இப்பெடியெல்லாம் இருந்துவிட்டு இப்போதெல்லாம் சண்டை வந்தால் வாயே திறப்பதில்லை.பதிலுக்குப் பதில் பேசினால்தான் பிரச்சினையே என்பாள் தோழி

எல்லோருமே ஏன் பெண்கள் மட்டும் அனுசரிச்சுத்தான் போக வேண்டும் என நினைக்கிறார்கள்.இந்த புத்திமதியை யாரேனும் ஆண்களுக்குச் சொல்ல மாட்டார்களா?ஆணோ பெண்ணோ தப்பு செஞ்சவங்கதான் அனுசரிக்கனும்.இப்படியே அடங்கிப் போவதால்தான் ஆண்கள் இன்னும் கர்வத்தோடு நடக்கிறார்கள்.இந்தமுறை என் கோபம் உச்சத்தில் இருந்தது.எத்தனை மாதமானாலும் நானாகப் பேசப் போவதில்லை.அவரால்தானே பிரச்சினை ஆரம்பித்தது அவராகவே பேசட்டும்.

மாலை வீட்டுக்கு வந்தவரின் முகம் சோர்ந்து போயிருந்தது. ஒன்றும் பேசாமல் படுத்துக் கொண்டவரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.இதே போன்ற சந்தர்ப்பத்தில் தலைவலி காய்ச்சல்னு படுத்தா டாக்டரிடம் காட்ட வேண்டியதுதானே.சண்டை போட வாய் நீளுது இது தெரியாதா எனக் கடுமையான வார்த்தைகள் வெடிக்கும்.மகன் மூலம் தூது வரும்.

பார்த்துக் கொண்டிருக்க மனசு கேட்கவில்லை.என்னங்க செய்யுது தலை வலிக்கிறதா என நெற்றியில் கை வைத்துப் பார்க்க,உடம்பு சூடு இல்லை காய்ச்சல் இல்லை.

இந்தாங்க இந்த காபியைக் குடித்து விட்டுப் பேசாம படுங்க.அலுவலக வேலையெல்லாம் பிறகு பார்த்துக்கலாம்.நன்றாகப் படுத்து ஓய்வெடுங்க அதட்டலாக சொன்னபடி தைலம் தடவி போர்வையைப் போர்த்தி விடும்வரை என் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டவர் மௌனமாக என் கைகளைப் பற்றிக் கொண்டார்.

இந்த சண்டை இத்தோடு முடிந்து போகாது.மீண்டும் ஒரு தருணத்தில் நீயா நானா என ஆரம்பிக்கலாம்.பல நாட்கள் பேசாமலும் இருக்கலாம்.எதுவாக இருந்தாலும் முடிவு மட்டும் இப்படித்தான் இருக்கும்.

சிரிப்புத்தான் வந்தது.
யாருக்கு வெட்கமில்லை?
செம்மொழிப் பைந்தமிழ் மன்றம் வழங்கும் சிறுகதைப் போட்டிக்காக:

20 மறுமொழிகள்::

அண்ணாமலையான் said...

முடிவு மட்டும் இப்படித்தான் இருக்கும்.”
அனுபவமா?

கண்மணி said...

சொந்த அனுபவப்பட்டுத்தான் கதை சொல்லனுமா என்ன?
இது பெண்களுக்கான பொது அனுபவம்

cheena (சீனா) said...

அன்பின் கண்மணி

அருமை அருமை - இயல்பான சிந்தனை - இது பொதுவாக எல்லார் வீட்டிலும் நடப்பது தான். மனம் வேறு வாய் வேறு. வாய் சொல்வதெல்லாம் இதயத்தின் ஆழத்தில் இருந்து வரும் சொற்களல்ல - உதட்டின் நுனியில் இருந்து வரும் சொற்கள். இதயம் பேசுவது புரிந்தால் பிரச்னையே இல்லை.

நல்வாழ்த்துகள்

பூங்குன்றன்.வே said...

அதாங்க மனைவிங்கிறது..என்னதான் கட்டினினவன் அடிமைமாதிரி நடத்தினாலும் அவனுக்கு உடம்புக்கு முடியாமபோகும்போது பதைபதைக்கும்
மனைவியால்தான் இன்னும் நம்நாட்டில் குடும்பம் என்கிற அமைப்பு சிதையாம இருக்கு.இருந்தாலும் நீங்க சொல்ற இந்த கதையில் கணவன் பண்ணும் அட்டகாசம் வன்மையா கண்டிக்ககூடியது;

கணவன் என்று பார்க்காம நாலு சாத்து சாத்தினா இந்த மாதிரி ஆட்கள் திருந்துவாங்க..கதை வெற்றி பெற வாழ்த்துக்கள் ..

கதிரவன் said...

கதை ரொம்ப இயல்பானதா இருக்குது - ஆனா, தலைப்பு ஏனோ ரொம்ப தீவிரமா பட்டது எனக்கு.

கண்மணி said...

வாங்க பூங்குன்றன்.உண்மைதான்.இன்னும் நம்முடைய கலாச்சாரம் சிதையாம இருப்பது இந்த அனுசரிப்பில்தான்.
இது நான் பார்த்த பல குடும்பத்தில் நடந்தவைகள்தான்.

கண்மணி said...

வாங்க கதிர் எவ்வளவு கோப தாபம் இருந்தாலும்,துரோகம் இழைக்கப் பட்டிருந்தாலும் மனைவி என்பவள் அதைப் பொருட்படுத்தாமல் [வெட்கங்கெட்டு]இயல்புக்கு மாறுவதுதான் குடும்பம்.நடைமுறையிலும் இருக்கு.
நான் சொன்னது பெண்களை.
யப்பா இந்த ஆம்பிளைங்களை இல்ல.

ஜீவன்பென்னி said...

கதை நல்லாயிருக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அண்ணாமலையான் said...

சரி சரி போட்டியில் வெற்றி பெற உள்ளம் பொங்கிய வாழ்த்துக்கள்.. (நெசமாத்தாண்)

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

வணக்கம்
கதை நன்று வாழ்த்துக்கள்.

கண்மணி said...

வாங்க கல்பனா.வருகைக்கு நன்றி.
அண்ணாமலையான் உங்க யூனிவஸ்ட்டியாம்;))
ஒரு பதிவர் சந்திப்பு நிகழ்த்துங்களேன்.

கோபிநாத் said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா ;)

கதையும் நடையும் அருமை ;)

\\இந்த சண்டை இத்தோடு முடிந்து போகாது.மீண்டும் ஒரு தருணத்தில் நீயா நானா என ஆரம்பிக்கலாம்.பல நாட்கள் பேசாமலும் இருக்கலாம்.எதுவாக இருந்தாலும் முடிவு மட்டும் இப்படித்தான் இருக்கும்.\\

இந்த பத்தி இல்லமால் இருந்தால் இன்னும் நல்லாயிருக்கும் ;)

Anonymous said...

இதைக்கொஞ்சம் மாத்தி கவிதையா உரையாடல் போட்டிக்கு அனுப்பிச்சிருக்கலாம் :)

புலவன் புலிகேசி said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்....

கண்மணி said...

அம்மிணி இதுல உள்குத்து ஏதுமில்லையே?

கண்மணி said...

கோபி பிரண்ட்ஸ் சண்டப் போட்டுட்டு திரும்ப பேசினா பாரு வெட்கமேயில்லாம பேசிக்கிறாங்கன்னு சொல்வாங்க.
இங்கே குடும்பம் கணவன் மனைவி.சண்டையும் சேர்ந்து கொள்வதும் வாடிக்கை.
இது முடிவல்ல.ஒரு தொடர் வாடிக்கை.அதுனால்தான் அப்படி எழுதினேன்.புனைவாக மட்டும் இருந்தால் பட்டென்று முடிக்கலாம்.யப்பா எனக்கு உன்னைப் போல சின்னம்மினி போல அழகா கதை எழுத வராது.
நான் டமாஷ் பண்ணும் அக்காதானே

கண்மணி said...

நன்றிங்க புலவன்[ர்] புலிகேசி.

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

கண்டிப்பாக நிகழ்த்தவேண்டும் .நீங்கள் எப்பொழுது சிதம்பரம் வருகின்றீர்கள்.

அண்ணாமலையான் said...

உங்க ஓட்டு குறையுதே?

aazhimazhai said...

கதை இல்லை இல்லை கதை வடிவில் நீங்கள் தொடுத்து இருக்கும் நிஜம் ( நிறைய வீட்டில் இன்று இது தான் நடை முறை பெண்கள் இயந்திரமாகத்தான் மாறிடறாங்க) ரொம்ப நல்ல இருக்கு !!! நானும் இதற்கு இணையா ஒரு பதிவை எழுதி நேரமின்மையால் பாதியில் நிறுத்தி இருக்கேன் !!!! உங்க பதிவை பார்க்கும் பொது ரொம்ப சந்தோசமா இருந்தது !!!!

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)